Home செய்திகள் தேசிய செய்திகள் ஏப்ரல் 1 முதல் மருந்துமாத்திரைகள் விலை உயரும் அபாயம்

ஏப்ரல் 1 முதல் மருந்துமாத்திரைகள் விலை உயரும் அபாயம்

புதுடெல்லி: மார்ச் 26 –
ஈரான் போர் காரணமாக இந்திய மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். ஒரு புறம் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது மறுபுறம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நீடிக்கிறது. இதற்கிடையே ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன, டீ, காபி மற்றும் உணவுகளின் விலைகள் உயர்ந்து வருகின்றன.
இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் மக்களுக்கு இன்னொரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியிருக்கிறது. வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து நம்முடைய மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் செலவு ஏற்பட போகிறது. ஆண்டுக்கு ஒரு முறை இந்தியாவில் மொத்தவிற்பனை விலை குறியீட்டை அடிப்படையாக கொண்டு மருந்து மாத்திரைகளின் விலைகள் உயரும்.
அதன்படி வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பல்வேறு அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளின் விலைகள் உயரப் போகின்றன, வலி நிவாரணிகள், ஆன்டிபயாட்டிக் மற்றும் நோய் தொற்றை எதிர்த்து போராடக்கூடிய மாத்திரைகளின் விலை உயரப் போகிறது. மொத்த விற்பனை விலை குறியீடு அதிகரித்திருப்பதால் மத்திய அரசு அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலின் கீழ் இருக்கக்கூடிய சுமார் 1000 மருந்துகளுக்கான விலையை உயர்த்திக்கொள்ள மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி இருக்கிறது.
மக்கள் அதிகமாக வாங்கி பயன்படுத்தக்கூடிய பாராசிடமால் உள்ளிட்ட பல்வேறு மருந்துகளின் விலை கணிசமாக உயர போகிறது. அசித்ரோமைசின், வைட்டமின், மினரல் மருந்துகளின் விலைகளும் இனி உயர போகின்றன. அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு நம்முடைய மருத்துவ செலவினங்களை சற்று அதிகரிக்கும். வைட்டமின் மாத்திரைகளை தொடர்ச்சியாக எடுத்து கொள்பவர்களுக்கு மாதாந்திர செலவு அதிகரிக்கும்.