Home மாவட்டங்கள் பெங்களூர் ஒரு வாக்குக்கு ரூ.1,000 மதுரையில் தொடங்கிய பணப்பட்டுவாடா

ஒரு வாக்குக்கு ரூ.1,000 மதுரையில் தொடங்கிய பணப்பட்டுவாடா

மதுரை: ஏப்ரல் 20-
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், மதுரையில் பணப்பட்டுவாடா தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. வாக்குக்கு ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் வாக்காளர்களுக்கு சில கட்சிகள் பணம் கொடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் ஆணையம் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அத்தனை கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வேட்பாளர்களும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரையில் சில கட்சிகள் பணப்பட்டுவாடாவை தொடங்கிவிட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, திருப்பரங்குன்றன், திருமங்கலம் உள்ளிட்ட தொகுதிகளில் பணப்பட்டுவாடா ஜரூர் வேகத்தில் நடந்து வருகிறது. வாக்காளர்களுக்கு ரூ.1,000 என்ற ரீதியில் பணத்தை சில கட்சிகள் வாரி இரைத்து வருகின்றன. இந்த பணப்பட்டுவாடா கட்சி பாரபட்சமின்றி நடப்பது தான் இன்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பணப்பட்டுவாடா நடப்பதால், மதுரை வடக்கு தொகுதியின் தவெக வேட்பாளர் கல்லணை பொது மேடையிலேயே கண்ணீர்விட்டு அழுதுள்ளார். 20 நாட்களுக்கும் மேலாக வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்துள்ளோம்.. கால் வலி எடுக்கிறது.. இப்படியான நேரத்தில் பணப்பட்டுவாடாவை சில கட்சிகள் தொடங்கியுள்ளனர். பணத்தை வாங்காமல், எங்களை நம்புங்கள்.. கண்டிப்பாக ஏமாற்ற மாட்டோம் என்று பேசி இருக்கிறார். ஆனாலும் பொதுமக்கள் பணத்தை வாங்குவதிலும் குறியாக இருக்கின்றனர். குறிப்பாக இளைஞர்களை விடவும் பெண்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா அமோமாக செய்யப்பட்டு வருகிறது. தவெகவின் வரவால் இளைஞர்களை சில கட்சிகள் நம்ப மறுக்கின்றனர்.
அதேபோல் கட்சியினர் மூலமாகவே பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. கரூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குக்கு ரூ.3 ஆயிரம் வரை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரையில் முக்கிய கட்சிகளும் கூட ரூ.1,000 வரை அளித்து வருகின்றனர். இதனால் வாக்குப்பதிவில் பணம் முக்கிய பங்காற்றும் என்று பார்க்கப்படுகிறது.