ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி லாபம்

மும்பை: பிப்ரவரி 4-
இந்தியா மீதான அமெரிக்க வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக பங்குச் சந்தை நேற்று எழுச்சியடைந்தது.
இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. வரலாறு காணாத வகையில் சென்செக்ஸ் 4,200 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமானது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 1-ம் தேதி மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதையடுத்து வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருந்தாலும், பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பங்குச் சந்தை வேலை செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் பங்கு பரிவர்த்தனை வரி (எஸ்டிடி) உயர்த்தப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதையடுத்து இந்திய பங்குச் சந்தைகள் மளமளவென வீழ்ச்சி அடைந்தன. சென்செக்ஸ் 1,546.84 புள்ளிகள் (1.88%) சரிந்து 80,722.94 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 495.20 புள்ளிகள் (1.96%) வீழ்ச்சியடைந்து 24,825.45 புள்ளிகளில் நிலை கொண்டது.
இதனால் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு அன்றைய தினம் மட்டும் ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்தியா மீதான வர்த்தக வரியை 18 சதவீதமாக குறைத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்றுமுன்தினம் திடீரென அறிவித்தார்.
இது பங்குச் சந்தையில் நேற்று எதிரொலித்தது. பங்குச் சந்தை வர்த்தகம் நேற்று காலை தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 4,205 புள்ளிகளுக்கு மேல் (5%) உயர்ந்து 85,872 புள்ளிகளை எட்டியது. பின்னர் சற்று குறைந்து வர்த்தகமானது. இறுதியில், 2,073 புள்ளிகள் உயர்ந்து 83,739-ல் நிலை பெற்றது. இதுபோல நிப்டி 1,250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. வர்த்தக இறுதியில் 639 புள்ளிகள் உயர்ந்து 25,727-ல் நிறைவடைந்தது. இது 2.55 சதவீத உயர்வு ஆகும்.
நேற்றைய வர்த்தகத்தில் பெரும்பாலான பங்குகள் உயர்வுடன் முடிந்தன. இதுபோல நடுத்தர மற்றும் சிறு நிறுவன குறியீடுகள் உயர்வுடன் முடிந்தன. ஜவுளி, தோல், ஜெம் அன்ட் ஜுவல்லரி, கடல் உணவு ஏற்றுமதி, சிறப்பு ரசாயனம் தொடர்பான நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டன.
நிப்டி-50-ல் இடம்பெற்றுள்ளவற்றில் அதிகபட்சமாக அதானி என்டர்பிரைசஸ் பங்கு 10.5% உயர்ந்தது.
அதானி போர்ட்ஸ் 9.1%, பஜாஜ் பைனான்ஸ் 6.6%, இண்டிகோ 5.57% உயர்ந்தது. டெக் மஹிந்திரா, பாரத் எலெக்ட்ரானிஸ் பங்குகள் மட்டும் சிறிய சரிவுடன் முடிந்தன. பங்குச் சந்தை உயர்வு காரணமாக ஒரே நாளில் முதலீட்டாளர்களின் ஒட்டுமொத்த பங்குகளின் மதிப்பு சுமார் ரூ.13 லட்சம் கோடி அதிகரித்தது.