Home மாவட்டங்கள் கிருஷ்ணகிரி ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்

ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்

கிருஷ்ணகிரி: மார்ச் 16-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடி பகுதியில் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் வேகமாக வந்த கார் நிற்காமல், காரை வழிமறித்த போலீஸ்காரர் மீது மோதியது. அந்த காவலர் சாமர்த்தியமாக காரின் முன்பகுதியில் தொற்றிக் கொண்டார். சினிமாவைப் போல் 4 கிலோ மீட்டர் தூரம் சாகச பயணத்திற்கு பின்னர் காரை போலீசார் மடக்கி பிடித்தனர். காவலருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி சோதனைச் சாவடி என்பது இருமாநில எல்லையில் இருக்கிறது. இரு மாநில போலீசார் அங்கு வழக்கமாக சோதனை செய்வார்கள். குட்கா, கஞ்சா,மதுபானங்கள், கணக்கில் வராத ஹவாலா பணம், நகை போன்றவற்றை பறிமுதல் செய்வார்கள். அதேபோல் வாகனங்களில் உள்ள பொருட்கள், அளவு போன்றவற்றையும் சோதனை செய்வார்கள். குற்றவாளிகள் சென்றாலும் பிடிப்பார்கள். அந்த வகையில் ஜூஜூவாடி சோதனைச் சாவடி போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் வேகமாக வந்த கார் நிற்காமல், காரை வழிமறித்த போலீஸ்காரர் ராஜீவ்காந்தி மீது மோதியது. அந்த காவலர் கடுமையான காயத்திலும் சாமர்த்தியமாக காரின் முன்பகுதியில் தொற்றிக் கொண்டார்.
அப்படி இருந்தும் காரை ஓட்டி வந்தவர், காரை நிறுத்தாமல் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக ஓட்டினார். இதைக் கண்ட சாலையோரம் நின்றவர்கள் அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர். சினிமாவைப் மிஞ்சும் வகையில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர் உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத் முபாரக் தலைமையிலான போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் 4 கிலோ மீட்டர் தூரம் காரை விரட்டிச் சென்றனர். ஓசூர் தர்கா பகுதியில் அந்த காரை போலீசார் மடக்கினர். அப்போது டிரைவர் மீண்டும் அங்கு நின்ற போலீசாரை இடித்து விட்டுச் செல்ல முயன்றார். ஆனால் போலீசார் அந்த காரை சுற்றிவளைத்து பிடித்தார்கள்
தொடர்ந்து காரில் சோதனை செய்தபோது குட்கா, கர்நாடக மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஓசூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது டிரைவர் ஓசூர் காளேகுண்டா பகுதியைச் சேர்ந்த யாரப் பாஷா (வயது 34) என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து யாரப் பாஷாவை போலீசார் கைது செய்தனர். மேலும் காரில் இருந்த 390 கிலோ குட்கா, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்கள். காவலர் ராஜீவ்காந்திக்கு கால் முறிவு ஏற்பட்டது. அவர் ஓசூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.