
சென்னை: மார்ச் 30-
வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களில விறகு பயன்பாடு அதிகரிப்பதால் அதன் விலை ஒரு குண்டு ரூ.320-லிருந்து ரூ.500 வரை உயர்ந்துள்ளது.
அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் காரணமாக இந்தியா முழுவதும் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிக சிலிண்டர்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஊரகப் பகுதிகளில் வீட்டு உபயோக சிலிண்டர் பதிவு செய்து பல நாட்கள் காத்து கிடக்கின்றனர்.
அடுத்த சிலிண்டர் பதிவு செய்வதற்கான இடைவெளி 21 நாட்களாக இருந்தது, நகர்ப்புறங்களில் 25 நாட்களாகவும், ஊரக பகுதிகளில் 45 நாட்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டரை நிரப்புவதற்கு பதிவு செய்ய ஐவிஆர்எஸ், ஆயில் நிறுவன செயலி, மிஸ்டு கால் என பல்வேறு முறைகளில் முயன்றும் பதிவு செய்ய முடியவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். வணிக சமையல் காஸ் கிடைக்காததால், பல ஓட்டல்கள் மூடப்பட்டன. சில ஓட்டல்களில் உணவு தயாரிப்பு அளவு குறைப்பு, 4 வகை பொரியல், 3 வகை சட்னி கொடுக்காமல் ஒரே வகை பொரியல், சட்னி கொடுப்பது என சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.சில ஓட்டல்கள் விறகு அடுப்புகளை பயன்படுத்தி உணவு தயாரித்து வருகின்றன. மேலும் மாணவர் தங்கும் விடுதிகள், பயணியர் தங்கும் விடுதிகள், தரை தளம் மட்டும் கொண்ட தனி வீடுகள் போன்றவற்றில் சுடுதண்ணீர் காய வைக்கவும், டீக்கடைகள் பலவற்றிலும் விறகு அடுப்புகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

















