
சென்னை: ஏப்ரல் 23-
வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு போதிய பேருந்துகள் இல்லாததால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு எழுந்தது. விடிய விடிய காத்திருந்த மக்கள் பொறுமையை இழந்து மறியல் செய்தனர். தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. ஜனநாயக கடமையை ஆற்ற மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தென் தமிழகத்திற்கு செல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இரவு முதலே காத்திருந்தனர்.
பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் அவர்களின் காத்திருப்பு விடிய விடிய காத்திருந்தனர். இதனால் பயணிகள் ஆத்திரம் அடைந்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு எழுந்தது. சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அவை மக்களுக்கு போதவில்லை என்றே தெரிகிறது. அது போல் பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு பேருந்துகள் இல்லாததால் மக்கள் மறியல் செய்தனர். தீபாவளி, பொங்கலை காட்டிலும் இந்த முறை தேர்தலில் வாக்களிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக பேருந்து நிலையங்களில் காத்திருக்கிறார்கள். அது போல் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வழியெங்கும் உள்ள ஹோட்டல்களிலும் கூட்டம் அலைமோதியது.


















