
கொழும்பு, பிப். 10- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள எஸ்எஸ்சி ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள ஜிம்பாப்வே – ஓமன் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஓமன் அணி 19.5 ஓவர்களில் 103 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணி 7 ஓவர்களில் 27 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்களை பறிகொடுத்தது. கேப்டன் ஜதிந்தர் சிங் 5, ஹமத் மிர்சா 0, அமீர் கலீம் 5, கரண் சோனாவாலே 0, வாசிம் அலி 3 ரன்களில் நடையை கட்டினர். சற்று தாக்குப்பிடித்து விளையாடிய விநாயக் சுக்லா 21 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 28 ரன்களும் சூஃப்யான் மெஹ்மூத் 39 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்களும் நதீம் கான் 18 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 20 ரன்களும் சேர்த்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் ரிச்சர்டு நகரவா, பிளெஸ்ஸிங் முசராபானி, பிராடு இவான்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 104 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரரான பிரையன் பென்னட் 36 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 48 ரன்களும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பிரண்டன் டெய்லர் 30 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்களும் விளாசினர். முன்னதாக தடிவனாஷே மருமானி 11 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தியோன் மையர்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். கேப்டன் சிகந்தர் ராசா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி 2 புள்ளிகளை பெற்றது. ஆட்ட நாயகனாக பிளெஸ்ஸிங் முசராபானி தேர்வானார்.















