
ஈரான் போர் இந்தியாவின் பொருளாதாரத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எல்பிஜி தட்டுப்பாடு ஹோட்டல் உணவுகளின் விலைகளை உயர்த்தி இருக்கிறது. தனியார் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தியுள்ளன. இந்த சூழலில் 2026 – 27 ஆம் நிதியாண்டிற்கான முதல் நாணயக் கொள்கை குழு கூட்டம் மும்பையில் தொடங்கி இருக்கிறது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்குமா அல்லது அதே அளவில் நீட்டிக்கச் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி 1.25% வரை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது. இதனால் வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டியும் ஒரு சதவீதத்திற்கும் மேல் குறைந்தது. வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு பல லட்சங்கள் சேமிக்கப்பட்டன. ஈரான் போர் சூழலுக்கு மத்தியில் நடப்பு நிதியாண்டின் முதல் நாணயக் கொள்கை குழு கூட்டம் மும்பையில் இன்று தொடங்கி புதன்கிழமை வரை நடைபெறுகிறது. ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையிலான ஆறு பேர் கொண்ட அதிகாரிகள் நாட்டின் தற்போதைய பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, பணவீக்கம் , ஏற்றுமதி, இறக்குமதி, ஈரான் போரால் இந்தியாவில் ஏற்பட்டிருக்க கூடிய தாக்கங்கள் உள்ளிட்ட அனைத்தையும் குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளனர்.


















