Home செய்திகள் தேசிய செய்திகள் கடன் செயலிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்!

கடன் செயலிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்!

கண்ணூர் , ஏப்ரல் 20- கேரளத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் அண்மையில் தற்கொலை செய்துகொண்டதன் பின்னணியில், ஓர் எண்ணிலக்கக் கடன் செயலியின் (Digital Loan App) துன்புறுத்தல் இருப்பது தெரியவந்துள்ளது. செயலிகள் வழியாகக் கடன் பெற்றவர்கள் அதைத் திருப்பிச்செலுத்த முடியாமல் மிரட்டல்களுக்கு ஆளாவதாகப் புகார்கள் அதிகரிக்கும் நிலையில், இப்பிரச்சினையில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. கண்ணூரைச் சேர்ந்த பல் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் நிதின்ராஜ், கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கடன் செயலியில் ரூ.13,500 கடன் பெற்றுள்ளார். அவர் 19 ஆயிரம் ரூபாய் திருப்பிச் செலுத்த வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட செயலி நிறுவனத் தரப்பு வற்புறுத்திய நிலையில், 1,000 ரூபாயைச் செலுத்தியுள்ளார். அதன்பின் நான்கு நாள்கள் கழித்து, கல்லூரியில் இருந்த நேரத்தில் அவரது அலைபேசிக்கு 96 அழைப்புகள் அச்செயலி நிறுவனத்தால் விடுக்கப்பட்டுள்ளன. அவரது பேராசிரியருக்கும் 26 அழைப்புகள் சென்றிருக்கின்றன. அது பற்றிக் கல்லூரி நிர்வாகம் கேள்வி எழுப்பிய நிலையில் அம்மாணவர் தற்கொலை செய்துகொண்டார். மாணவர் மரணத்தில் சாதியப் பாகுபாடு பிரச்சினை இருப்பதாகப் பேசப்பட்ட நிலையில், அது பற்றி விசாரித்து ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேரளக் காவல் துறைக்குத் தேசியப் பட்டியல் சாதியினர் ஆணையம் உத்தரவிட்டது. விசாரணையில், கடன் செயலியின் சுரண்டல் செயல்பாட்டால் மாணவர் அவதிக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் எண்ணிலக்க வழியில் கடன் வழங்கிவருகின்றன. இவற்றின் செயலிகள் மூலமாகக் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்த முடியாமல் விபரீத முடிவுகளை நோக்கி மக்கள் நகர்வதும் இன்னொருபுறம் அரங்கேறிவருகிறது. ‘ஆவணங்கள் தேவையில்லை; உடனடியாகக் கடன் பெறலாம்’ என்கிற அம்சம், எந்தவித முன்யோசனையும் இல்லாமல் கடன் பெறுவதற்கு இளையோரை உந்துகிறது. கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் நேரும்போதோ, அதிக வட்டி விகிதத்தை எதிர்கொள்ள முடியாதபோதோ, இதர சில பிரச்சினைகளில் சிக்குகிறபோதோ கடன்பெற்றவர்கள் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். இதில் இளைஞர்கள், மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.