
பெங்களூரு: மார்ச் 10-
கர்நாடகாவில் பட்டியலில் உள்ள 101 சாதியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க, எஸ்சி – ஏ (மாதிகா, அருந்ததியர் உள்ளிட்ட சாதிகள்), எஸ்சி – பி (ஹொலையா, ஆதிதிராவிடர் உள்ளிட்ட சாதிகள்), எஸ்சி – சி என 3 பிரிவுகளாக பிரித்துள்ளது.
அரசின் இந்த முடிவால் எஸ்சி- பி மற்றும் எஸ்சி- சி பிரிவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட சாதியினர் கல்வி, வேலை வாய்ப்பில் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அந்த பிரிவினர் கர்நாடகாவில் பல்வேறு போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக அரசு காலியாக உள்ள 56,432 பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை வெளியிட்டது. இதற்கு எதிராக மைசூரு, குல்பர்கா, பீதர் உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்சி- பி பிரிவை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.இது குறித்து ஆலோசிப்பதற்காக முதல்வர் சித்தராமையா அமைச்சரவையை கூட்டினார். அப்போது அமைச்சர்களிடையே உள் ஒதுக்கீடு வழங்குவதில் கருத்து முரண் ஏற்பட்டது. இதையடுத்து, ஒருமித்த முடிவு எடுக்க முடியாமல் அமைச்சரவை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
கர்நாடக சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் கூறுகையில், ”உள் ஒதுக்கீடு தொடர்பாக மீண்டும் விவாதிக்க சிறப்பு கூட்டத்தை கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே 56,432 பணி இடங்களை நிரப்புவதற்கான அரசாணையை அரசு நிறுத்திவைக்க முடிவெடுத்துள்ளது” என்றார்.


















