காலநிலை மாற்றம் எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி ரூ.1,341 கோடியில் திட்டங்கள்

சென்னை: பிப்ரவரி 17-
2025–26 நிதியாண்டுக்கான முதல் காலநிலை பட்ஜெட்டை வெளியிடும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் மேயர் ஆர்.பிரியா பங்கேற்று, துணை மேயர் மு.மகேஷ்குமார், துணை ஆணையர் ம.பிரதிவிராஜ் ஆகியோர் முன்னிலையில், மாநகராட்சியின் காலநிலை பட்ஜெட்டை வெளியிட்டார்.
இது, ஒரு நகரத்தின் காலநிலை உறுதிப்பாடுகளை அதன் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் செலவு முடிவுகளின் மையத்தில் வைக்கும் ஒரு நிர்வாகக் கட்டமைப்பாகும். 2025–26 நிதியாண்டில், மூலதனச் செலவினங் களுக்காக மாநகராட்சி ரூ.3,190.61 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது, அதில் ரூ.1,341.2 கோடி (42.04%) காலநிலை தொடர்பான செலவினங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
துறை வாரியாக, நகர்ப்புற வெள்ளம் மற்றும் நீர் பற்றாக்குறை ஆகியவை காலநிலை செலவினங்களில் மிகப்பெரிய பங்கை (62.24%) கொண்டுள்ளன.
அதைத் தொடர்ந்து கழிவு மேலாண்மை (26.15%) மற்றும் நிலையான இயக்கம் (9.96%) ஆகியவை உள்ளன.
அடையாளம் காணப்பட்ட காலநிலை தொடர்பான திட்டங்களில், மழைநீர் வடிகால்கள் மற்றும் மதகுகளை மேம்படுத்துதல், கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் பயோ மைனிங் முறையில் குப்பையை பிரித்து நிலத்தை மீட்டெடுத்தல், முழுமையான வீதிகள் மற்றும் சுகாதார நடைபாதை முயற்சிகள், நீர் உறிஞ்சும் பூங்காக்கள் மற்றும்
மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்குதல், ஏரிகளை மீட்டமைத்தல், குளங்களை புதுப்பித்தல் உள்ளிட்டவை அடங்கும். இந்த ஆண்டு காலநிலை பட்ஜெட்டின் கீழ்
அளவிடப்பட்ட நடவடிக்கைகள் 4.1 மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடு வெளியீட்டை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட் விவரங்களை www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.