Home விளையாட்டு காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்

காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்

டல்லாஸ், ஜூலை 7- நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின் அணி. இதன் மூலம் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது ஸ்பெயின். அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள டல்லாஸ் நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே இரு அணிகளும் சம அளவில் சமர் செய்தன. இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் இந்த இரண்டு அணிகளும் இருந்தன. அதன் காரணமாக இந்த ஆட்டத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இதில் ஸ்பெயின் அணி 522 பாஸ்களை வெற்றிகரமாக மேற்கொண்டது. போர்ச்சுகல் அணி 434 பாஸ்களை மேற்கொண்டது. இதில் ஆறு ஷாட்களை ஆன் டார்கெட்டில் வைத்திருந்தது ஸ்பெயின். இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ஸ்பெயின் அணிக்காக லாமைன் யமால் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். முன்னவர் கால்பந்து விளையாட்டின் தலைசிறந்த வீரர். பின்னவர் அந்த இடத்தை நோக்கி வளர்ந்து வரும் வீரர். ஆனால், இருவரும் இந்த ஆட்டத்தில் கோல் பதிவு செய்யவில்லை. உலகக் கோப்பை தொடரில் ரொனால்டோ பங்கேற்று விளையாடிய கடைசி ஆட்டமாக இது இருக்கக்கூடும். லேட் வின்னர் கோல்! இந்த ஆட்டத்தில் 90 நிமிடங்கள் முடிந்த நிலையில் இரண்டு அணிகளும் கோல் பதிவு செய்யாமல் இருந்தன. எப்படியும் ஆட்டம் கூடுதல் நேரம் நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு முன்னதாக இரண்டாவது பாதியின் இறுதியில் வழங்கப்பட்ட ஸ்டாப்பேஜ் டைமில் 90+1வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்காக கோல் பதிவு செய்தார் மெரினோ. அதன் மூலம் ஆட்ட நேர இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறி உள்ளது. இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவிய ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி, தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.