Home செய்திகள் தேசிய செய்திகள் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா மீது வரதட்சணை கொடுமை புகார்

கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா மீது வரதட்சணை கொடுமை புகார்

கான்பூர், மார்ச் 10- ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரராக இருந்த அமித் மிஸ்ரா மீது அவரது மனைவி கரிமா திவாரி வரதட்சணை கொடுமை மற்றும் குடும்ப வன்முறை புகாரை அளித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நீதிமன்றத்தில் இந்த புதிய புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொடர்ந்து துன்புறுத்தியதாக கரிமா திவாரி அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார். இவர் இந்திய அணிக்காக விளையாடிய லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா அல்ல. இந்த புகாருக்கு ஆளாகி இருக்கும் அமித் மிஸ்ரா உத்தர பிரதேசத்தில் உள்ள கான்பூர் நகரத்தை சேர்ந்தவர். மித வேகப் பந்துவீச்சாளரான இவர் உத்தர பிரதேச மாநில அணிக்காக கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். 2014 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். ஆனால், ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை. கரிமா திவாரி அளித்துள்ள புகாரின்படி, கிரிக்கெட் வீரரும், தற்போது ரிசர்வ் வங்கியின் அதிகாரியாகப் பணிபுரியும் அமித் மிஸ்ராவும் அவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமாகியுள்ளனர். அதன் பிறகு இருவரும் சுமார் மூன்றாண்டுகள் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது திருமணம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி கான்பூர் கிளப்பில் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, அமித் மிஸ்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் பத்து லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு கார் வேண்டும் என்று வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தத் தொடங்கியதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணத்தின் போது கரிமா திவாரியின் குடும்பத்தினர் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். ஆனால், மேலும் பணம் கேட்டுத் தொடர்ந்து துன்புறுத்தல்கள் நடந்துள்ளன. மதுபோதையில் அமித் மிஸ்ரா தன்னைத் தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், சில நேரங்களில் பல நாட்களாக உணவு கூட வழங்காமல் அடைத்து வைத்ததாகவும் கரிமா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மாடலிங் தொழில் மூலம் தான் சம்பாதித்த பணத்தையும் தனது கணவர் பறித்துக்கொண்டார் என்றும், விவாகரத்து செய்துவிடுவதாகத் தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.