
சென்னை: மே 22-
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில் கட்சியின் தொண்டர்களுக்கு இது வரலாற்று சிறப்புமிக்க நாள் என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டிலுள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இது மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நாளாகும்.
கடந்த 59 ஆண்டுகளாக நமது தொண்டர்கள் கட்சியின் சித்தாந்தத்தை ஏந்தி, இரவு பகலாகப் போராடி வந்துள்ளனர். ஆட்சியில் பங்கேற்பதற்கான எந்தவொரு நம்பிக்கைக் கீற்றும் தென்படாத சூழ்நிலையிலும் கூட, தமிழ்நாடு மக்களுக்கு இன்னும் சிறந்த முறையில் சேவை செய்வதற்காக, அரசில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நமது தொண்டர்கள் எப்போதும் விரும்பினர்.அந்த வகையில், 59 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு காங்கிரஸ் அமைச்சர்கள் இன்று புதிய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு அமைச்சர் பதவிகளையும் நமது சித்தாந்தத்துக்காக எவ்வித சுயநலமுமின்றி உழைத்த, அர்ப்பணிப்புமிக்க, விசுவாசமான மற்றும் கடின உழைப்பாளிகளான நமது தொண்டர்களுக்கே நாங்கள் சமர்ப்பிக்கிறோம். தேபோல், கடந்த 59 ஆண்டுகளாக அதிகாரத்தில் எந்தப் பங்கும் இல்லாத நிலையிலும், தொண்டர்களின் பக்கபலமாக நின்ற நமது கட்சித் தலைமைக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள இருவரும் கட்சித் தொண்டர்களின் நலனுக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


















