
புதுடெல்லி, மார்ச் 25- கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் எஸ்சி அந்தஸ்து பறிபோகும். இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் மட்டுமே பட்டியல் சமூகத்தினராக இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. ஆந்திராவின் குண்டூர் மாவட்டம், கொத்தபெலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிந்ததா ஆனந்த். இவர் தனது கிராமத்தில் ஞாயிறுதோறும் கிறிஸ்தவ மத பிரார்த்தனை கூட்டங்களை நடத்தி வந்துள்ளார். இந்த சூழலில் அக்கலா ராமி ரெட்டி உள்ளிட்ட சிலர் தன்னை தாக்கியதாக உள்ளூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதன்பேரில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பான வழக்கு குண்டூரில் உள்ள எஸ்சி, எஸ்டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அக்கலா ராமி ரெட்டி உள்ளிட்டோர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.அதில்,”புகார்தாரர் சிந்ததா ஆனந்த் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி 10 ஆண்டுகளாகப் போதகராக உள்ளார். எனவே எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் புகார் அளிக்க முடியாது. வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம், “கிறிஸ்தவ மதத்தில் சாதிய அமைப்பு இல்லை. எனவே கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய சிந்ததா ஆனந்த் எஸ்சி வன்கொடுமை சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர முடியாது” என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிந்ததா ஆனந்த் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஷ்ரா, மன்மோகன் அடங்கிய அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: இந்து, சீக்கியம், புத்த மதங்களைத் தவிர்த்து ஏனைய மதங்களுக்கு மாறும் பட்டியலின மக்கள் உடனடியாக எஸ்சி அந்தஸ்தை இழக்க நேரிடும். இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் மட்டுமே பட்டியல் சமூகத்தினராக இருக்க முடியும். மதம் மாறிய பிறகு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்று யாரும் உரிமை கோர முடியாது. எஸ்சி, எஸ்டி பிரிவுக்கான பாதுகாப்பு பலன்களையும் கோர முடியாது.sஇந்த வழக்கில் மனுதாரர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி 10 ஆண்டுகளுக்கு மேலாகப் போதகராக செயல்பட்டு வருவது நிரூபணமாகி உள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நாளிலும் அவர் கிறிஸ்தவராக இருந்துள்ளார். எனவே ஆந்திர உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, மனுதாரரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


















