சென்னை: பிப்ரவரி 12-
சென்னை மெரினா கடற்கரையில் அமையவுள்ள 300 கடைகளுக்கு குலுக்கல் முறையில் தேர்வு இன்று (பிப்.12) நடைபெறுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சென்னை மெரினா கடற்கரையில் அமையவுள்ள 300 கடைகளுக்கான குலுக்கல் முறையிலான தேர்வு சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் இன்று (பிப்.12) காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது.
ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.பால் வசந்தகுமார் மேற்பார்வையில் குலுக்கல் நடைபெறுகிறது. சென்னை மெரினா கடற்கரை 4 திட்டப் பகுதிகளில் மொத்தமாக 300 கடைகள் அமைக்கப்பட உள்ளன.
அவற்றில் உணவு வகைப்பாட்டுக்கு 100 வியாபாரிகளும், அலங்கார மற்றும் பரிசுப் பொருட்கள் வகைப்பாட்டுக்கு 100 வியாபாரிகளும் மற்றும் பொம்மை பொருட்கள் வகைப்பாட்டுக்கு 100 வியாபாரிகளும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
ஒவ்வொரு பிரிவுக்கும் 5 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். அறிவிப்பு பெற்ற வியாபாரிகள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் குலுக்கல் நடைபெறும் இடத்தைப் பார்வையிடலாம்.மேலும் 4 இடங்களில் குலுக்கல் நடைபெறுவதை பார்வையிடும் வகையில் 4 எல்.இ.டி. திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















