
திருவனந்தபுரம்: மார்ச் 28 கேரளாவில் அடுத்த மாதம் 9-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தற்போது மக்கள் செல்போன்களில் மூழ்கி கிடப்பதால், வாக்காளர்களை கவர கம்யூனிஸ்ட் , காங்கிரஸ் மற்றும் தே.ஜ கூட்டணி கட்சிகளின் ஐ.டி பிரிவுகள், ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் பிரச்சார தகவல்களை உருவாக்குவதில் மும்முரமாக உள்ளன.
பாஜக மற்றும் தேசியக் கொடிகளை ஏந்தியபடி மக்கள் வெள்ளம் சூழ, ஜீப் ஒன்றின் மீது ஏறி நின்று ஒரு அரசியல் தலைவர் கையசைத்தபடி பிரச்சாரத்தில் செல்கிறார்.
இது பிரதமர் மோடியோ அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரம் அல்ல.
கேரளாவின் எர்ணாகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பி.ஆர். சிவசங்கரின் பிரச்சார வீடியோதான் அது. அவர் ஒரு பிரம்மாண்டமான ஊர்வலத்தை வழிநடத்திச் செல்வது போலவும், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் வீதிகளில் திரண்டு இந்திய தேசியக் கொடி மற்றும் பாஜக கொடிகளுடன் வரவேற்பது போலவும்
ஏஐ தொழில்நுட்பத்தில் காட்சிகள் தத்ரூபமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருக்கின்றன.அங்கமாலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான ரோஜி எம். ஜான் கூறுகையில், “கட்சியின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க ஏஐ வீடியோக்களைப் பயன்படுத்துகிறோம்” என்றார்.

















