
சென்னை: மார்ச் 26-
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் காரணமாக உலகளாவிய அளவில் எரிபொருள் சந்தையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் கடல் வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் பல உலக நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தத் தொடங்கியுள்ளன. ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையே போர் காரணமாக மேற்கு ஆசிய பகுதிகளில் நிலவும் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் குறைந்துள்ளதாக சர்வதேச சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, எண்ணெய் விலை ஏற்றம் மட்டுமின்றி, பல நாடுகளில் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சிகளும் தீவிரமடைந்துள்ளன. ஆசிய நாடுகள் ஆசியாவின் மற்ற நாடுகளான பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலும் மக்கள் பொதுப் போக்குவரத்து, மிதிவண்டி பயணம் மற்றும் வாகனப் பகிர்வு போன்ற முறைகளை அதிகம் பயன்படுத்துமாறு அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. மியன்மர் நாட்டில் தனியார் வாகனங்கள் பதிவு எண்களின் அடிப்படையில் ஒற்றை-இரட்டை முறையில் அடுத்தடுத்த நாள்களில் மட்டும் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
டீசல் தட்டுப்பாடு கென்யாவில், எரிபொருள் பங்கீடு முறையுடன், ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தென் ஆப்பிரிக்காவில் நாட்டின் பல மாகாணங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பதற்றத்தில் அதிகளவில் எரிபொருள் வாங்குவதைத் தடுக்க கட்டுப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

















