புதுடெல்லி: பிப்ரவரி 10-
மக்களவையில் பேச ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்படுவதால் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இண்டியா கூட்டணி கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.
கடந்த 2ம் தேதி மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது முன்னாள் ராணுவ தளபதி நரவனேவின் நினைவுக் குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகத்தை மேற்கோள் காட்டி, சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச முயன்றார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதன் காரணமாக மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றன. இதே விவகாரம் தொடர்பாக மக்களவை, மாநிலங்களவை அலுவல்கள் நேற்றும் பாதிக்கப்பட்டன. இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. மக்களவையை நேற்று பாஜக மூத்த எம்பி சந்தியா ரேவழி நடத்தினார்.
அப்போது ராகுல் காந்தி கூறும்போது, “பட்ஜெட் விவாதத்துக்கு முன்பாக மக்களவையில் நான் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று சபாநாயகர் (ஓம் பிர்லா) தனிப்பட்ட முறையில் வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் திடீரென பின் வாங்கிவிட்டார். இதன் பின்னணி என்ன” என்று கேள்வி எழுப்பினார்.
மத்திய அமைச்சர் கருத்து ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு திட்டவட்டமாக மறுத்தார். அவர் கூறும்போது, “காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்துப் பேசினார். அப்போது நானும் உடனிருந்தேன். குறிப்பிட்ட விவகாரம் (சீன எல்லைப் பிரச்சினை) குறித்து ராகுல் காந்தி பேசுவதற்கு சபாநாயகர் எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. ராகுல் காந்தி கூறுவது முற்றிலும் தவறான தகவல்” என்றார்.இண்டியா கூட்டணி ஆலோசனை: முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காலை இண்டியா கூட்டணி எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதன் பிறகு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது: நாடாளுமன்ற விதிகளின்படி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரின் நிழல் போன்றவர். ஆனால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆளும் கட்சியினர், உயிருடன் இல்லாதவர்கள் குறித்து அவதூறாக பேசுகின்றனர்.மத்தியில் ஆளும் பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க முயற்சி செய்கிறது. இதுபோன்ற அணுகு முறையை இதற்கு முன்பு பார்த்தது கிடையாது. மக்களவை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா என்பது குறித்து இப்போதைக்கு கருத்து தெரிவிக்க முடியாது. என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை அறிய காத்திருங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Home செய்திகள் தேசிய செய்திகள் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: இண்டியா கூட்டணி திட்டம்













