
பெங்களூரு: மார்ச் 6- ‘
சுத்திகரிப்பு நடவடிக்கை’யின் கீழ், மாநில சிறைச்சாலைகளில் மொபைல் போன்கள், கஞ்சா மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, செயற்கை நுண்ணறிவு கண்டறிதல் அமைப்பு, சிசிடிவி உடல் கேமரா மற்றும் பிற அதிநவீன பாதுகாப்புத் திரையிடல் உபகரணங்கள் ரூ. 20 கோடி செலவில் வழங்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
சட்டசபையில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த முதலமைச்சர், மங்களூரு மத்திய சிறைச்சாலையின் இரண்டாம் கட்டம் மற்றும் ராய்ச்சூர் மாவட்ட மத்திய சிறைச்சாலை கட்டுமானப் பணிகள் நடப்பு ஆண்டு தொடங்கப்படும் என்று கூறினார்.
விஜயபுரா மற்றும் பிடாரில் தலா 1,000 கைதிகள் தங்கக்கூடிய அதிகபட்ச பாதுகாப்பு மத்திய சிறைச்சாலை மற்றும் மாவட்ட மத்திய சிறைச்சாலைகள் ரூ. 471 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
பெங்களூரு மத்திய சிறையில் “போதைப்பொருள் இல்லாத மையம்” நிறுவப்படும் என்று அவர் கூறினார்.

















