
புதுடெல்லி: ஏப்ரல் 2-
சிறையில் 50 நாட்கள், ஓட்டலில் 25 நாட்கள், பேருந்தில் 19 மணி நேர பயணம் என இந்தியர் ஒருவர் பல சிரமங்களை எதிர்கொண்டு தாயகம் திரும்பியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி சட்டவிரோதமாக டீசல் ஏற்றிச் செல்வதாக கூறி ‘எம்.டி. வேலியன்ட் ரோர்’ என்ற எண்ணெய் கப்பலை சர்வதேச கடல் எல்லையில் ஈரான் ராணுவம் சிறை பிடித்தது. கப்பலில் 16 இந்தியர்கள் உள்ளிட்ட 18 ஊழியர்கள் இருந்தனர். இவர்களில் 10 பேர் ஈரானின் பந்தர் அப்பாஸ் நகர சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய தூதரகத்தின தலையீட்டை தொடர்ந்து 50 நாள் சிறை வாசத்துக்கு பிறகு இவர்கள் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் டெல்லியின் புறநகர் பகுதியான காஜியா பாத்தை சேர்ந்த கேதன் மேத்தாவும் (37) ஒருவர். கடந்த ஞாயிற்றுக் கிழமை காஜியா பாத் திரும்பிய இவர் தனது திகிலூட்டும் பயண அனுபவம் பற்றி கூறியதாவது: நாங்கள் சிறையை விட்டு வெளியேறி, அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கியபோது, போர் மூளப்போவது குறித்து எங்களுக்கு சிறிதும் தெரியாது. ஆனால் மறுநாளே போர் வெடித்தததால் நாங்கள் முற்றிலும் திகைத்துப் போனோம். அனைத்தும் மூடப்பட்டன. விமான நிலையமும் மூடப்பட்டது.நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் பந்தர் அப்பாஸ் துறைமுக நகரில் இருந்து வெறும் 600- 700 மீட்டர் தொலைவிலேயே இருந்தது. இது ஈரானிய கடற்படையின் முக்கியத் தளம் என்பதால் போரின் தொடக்கத்தில் இருந்தே கடுமையாக தாக்கப்பட்டு வந்தது.இதையடுத்து நாங்கள் மேற்கொண்ட பேருந்துப் பயணம் இன்னும் ஆபத்து நிறைந்ததாக இருந்தது. பந்தர் அப்பாஸில் இருந்து சுமார் 1,800 கி.மீ. பேருந்தில் பயணம் செய்து ஆர்மீனியாவை அடைந்தோம். இதற்கு 18 முதல் 19 மணி நேரம் வரை ஆனது. வழியெங்கும் குண்டுகள் விழுந்துகொண்டிருந்தன. இப்பயணம் முழுவதும், சுற்றியுள்ள மலைகளிலிருந்து வெடிச் சத்தங்கள் எதிரொலித்துக் கொண்டே இருந்தன.பேருந்து கடுமையாக குலுங்கியது. இந்த அச்சம் நிறைந்த சூழலுக்கு மத்தியில் எப்படியோ நாங்கள் ஆர்மீனிய எல்லையை அடைந்தோம். இந்த துயரமான அனுபவத்தில் இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்ந்து எங்களுடன் தொடர்பிலேயே இருந்தது மிகவும் ஆறுதல் அளிப்பதாக இருந்தது.இவ்வாறு அவர் தனது பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.



















