
ஜம்மு: மார்ச் 5-
காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், சீனாவில் அதிநவீன கேமரா வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சீனாவிடம் உதவிகள் கோர தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலா பயணிகள் 25 பேர், உள்ளூர் குதிரை பராமரிப்பாளர் ஒருவர் என 26 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு என்ஐஏ அதிகாரிகள் காஷ்மீர் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது ‘கோ புரோ’ கேமரா உட்பட அதிநவீன கருவிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றை ஆய்வு செய்தபோது, பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே சீனாவின் டாங்குவான் நகரில் கேமரா வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தகவலை ஜம்முவில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.இதையடுத்து, விசாரணையின் அடுத்தகட்டமாக சீனாவிடம் உதவி கோர நீதிமன்றத்தில் இருந்து சட்டப்பூர்வமான அனுமதி கடிதம் அனுப்ப வேண்டும் என்று என்ஐஏ கோரியது. அதை ஏற்று கடந்த திங்கட்கிழமை நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த கடிதம் விரைவில் மத்திய வெளியுறவுத் துறை மூலம் சீன அரசுக்கு ஆதாரங்களுடன் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்த கேமரா மற்றும் அதிநவீன கருவிகளை வாங்கியது யார், அந்த கேமரா கடைசியில் தீவிரவாதிகளின் கைகளுக்கு எப்படி சென்றது என்பதை கண்டுபிடிக்க உதவும்படி இந்த கடிதம் மூலம் சீன அரசை என்ஐஏ கேட்டுக் கொள்ளும். இதுதொடர்பாக என்ஐஏ டிஐஜி சந்தீப் சவுத்ரி அனுப்பிய கோரிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே அனுமதி வழங்கி விட்டது.
இப்போது நீதிமன்றமும் அனுமதி வழங்கி உள்ளதால், விரைவில் சீன அரசிடம் உதவி கேட்டு சட்டப்பூர்வமான கடிதம் அனுப்பி வைக்கப்படும். ‘கோ புரோ ஹீரோ 12 பிளாக் கேமரா’ மாடல், எண் சி 3501 3254 71706 உட்பட பல்வேறு கருவிகளை காஷ்மீரில் என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இதில், சீனாவில் கேமரா வாங்கி பஹல்காம் தாக்குதலுக்குத் தீவிரவாதிகள் பயன்படுத்தி உள்ளனர். இது குறித்து கோ புரோ பிவி கம்பெனிக்கு விவரம் கேட்டு என்ஐஏ ஏற்கெனவே கடிதம் அனுப்பி இருந்தது. அதற்கு கோ புரோ பிவி கம்பெனி அனுப்பிய பதிலில், ”சம்பந்தப்பட்ட கேமரா சீனாவில் விநியோகஸ்தராக செயல்படும் ஏஇ குரூப் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.பின்னர் அந்த கேமரா குவாங்டாங் மாகாணம் டாங்குவான் நகரில் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், விநியோகஸ்தரிடம் பொருட்கள் சென்ற பிறகு, அவற்றை யார் யார் வாங்குகிறார், யார் பயன்படுத்துகிறார்கள் போன்ற விவரங்கள் எங்களிடம் கிடையாது. கேமராவை வாங்கியது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டுமானால் சீன அதிகாரிகளால்தான் முடியும்” என்று கூறிவிட்டது.


















