
சென்னை: பிப்ரவரி 11-
பொதுவாக கார்த்திகை, மார்கழி, தை, மாசி ஆகிய நான்கு தமிழ் மாதங்களில் குளிர் அதிகமாக இருக்கும். கார்த்திகை மார்கழியில் முன்பனி என்றால், தை மற்றும் மாசியில் பின் பனி இருக்கும். அந்த வகையில் தற்போது பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தற்போது தமிழ்நாடு முழுவதுமே பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனினும் செங்கல்பட்டு, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை போன்ற வடமாவட்டங்களில் பனியின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. இப்படி நிலவும் அதிகப்படியான பனிமூட்டத்திற்கு முக்கியமாக ‘வெப்பநிலை தலைகீழ் மாற்றம்’ மற்றும் வளிமண்டல நிலைகளே காரணம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வங்கக்கடலில் இருந்து வீசும் கிழக்கு திசைக் காற்றினால் தரைப்பகுதிக்கு அருகில் அதிகப்படியான ஈரப்பதம் நிலவுகிறது. இரவில் மேகங்கள் இல்லாத தெளிவான வானம் இருப்பதால், பூமியின் வெப்பம் வேகமாக வெளியேறி தரைப்பகுதி அதிக குளிர்ச்சியடைகிறது. பொதுவாக உயரே செல்லச் செல்ல வெப்பநிலை குறையும். ஆனால், தற்போது தரைப்பகுதியில் குளிர்ந்த காற்றும், அதற்கு மேல் ஒரு அடுக்கு வெப்பமான காற்றும் காணப்படுகிறது. இந்த வெப்பக் காற்று, குளிர்ந்த காற்றை மேலே செல்ல விடாமல் தரைப்பகுதியிலேயே அழுத்தி வைப்பதால் அடர்ந்த பனிமூட்டம் உருவாகிறது. காற்றின் வேகம் மிகவும் குறைவாக இருப்பதால், உருவான பனிமூட்டம் கலைந்து செல்லாமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது.வேலூர் மற்றும் ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்கள் நிலப்பரப்பிற்கு உள்ளே அமைந்திருப்பதால், அங்கு கடல் காற்றின் தாக்கம் குறைந்து இரவு நேர குளிர் அதிகமாக இருக்கிறது. இது பனிமூட்டம் இன்னும் தீவிரமடைய காரணமாக உள்ளது. இந்த நிலை வரும் பிப்ரவரி 14-ம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி வி.ஆர்.துரை வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் இருக்கும்.தென்கிழக்கு வங்கக் கடலின் சில பகுதிகள், இந்தியப் பெருங்கடல் கிழக்கு பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இன்றும், நாளையும் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

















