
சென்னை: மார்ச் 23-
சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச் சாவடிகளில் குடிநீர் உள்ளிட்ட குறைந்தபட்ச வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று 5 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்குச் சாவடிக்கு வெளியே வாக்காளர்கள் செல்போனை பாதுகாப்பாக வைத்துவிட்டு செல்லவும் முதல்முறையாக வசதி செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் 6 மாநிலங்களில் இடைத் தேர்தல்களுக்கான அட்டவணை கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலையொட்டி, வாக்குச் சாவடிகளில் ஒவ்வொன்றிலும் உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் செய்யப்படுவதை உறுதி செய்ய மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகளான குடிநீர், நிழலுடன் கூடிய காத்திருப்புப் பகுதி, தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை, போதிய வெளிச்சம், மாற்றுத் திறன்வாக்காளர்களுக்கான முறையான சாய்வுதளம், தரப்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு அறை மற்றும் முறையான வழிகாட்டி பலகைகள் ஆகியவை இடம்பெற வேண்டும்.
வாக்காளர்கள் உட்கார பெஞ்ச்: வாக்காளர்கள் தங்களது முறைக்காக காத்திருக்கும் போது அமருவதற்கு ஏதுவாக, வரிசையில் குறிப்பிட்ட இடைவெளிகளில் பெஞ்சுகள் அமைக்கவும் தலைமைத் தேர்தல் அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளது. வாக்காளர் விழிப்புணர்வை வலுப்படுத்த, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 4 சீரான மற்றும் தரப்படுத்தப்பட்ட வாக்காளர் வசதி சுவரொட்டிகள் முக்கியமாக காட்சிப்படுத்தப்படும்.
















