
சேலம், பிப்ரவரி.13-
தமிழக அரசியலில் களம் இறங்கியுள்ள த.வெ.க. தலைவர் விஜய், கரூர் சம்பவத்துக்குப் பிறகு ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிலையில், 55 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறந்தவெளி கூட்டத்தில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க விஜய் இன்று சேலம் வந்தார். அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11 மணிக்கு சேலம் விமான நிலையம் வந்தார்.அங்கிருந்து கார் மூலம் கூட்டம் நடைபெறும் திடலுக்கு சென்றார். இந்த கூட்டத்திற்காக த.வெ.க.வினருக்கு போலீஸ் தரப்பில் இருந்து 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, விஜய் வேனில் நின்றபடி மட்டுமே பேச வேண்டும்; இருக்கைகள் அமைக்கக்கூடாது. கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். பங்கேற்கும் அனைவருக்கும் அனுமதி அடையாள அட்டை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட நிபந்தனைகள் போலீசாரால் விதிக்கப்பட்டுள்ளன.

















