
சென்னை: பிப்ரவரி 10-
விஜய்யின் ஜனநாயகன் சென்சார் வழக்கினை சென்னை உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெற்றது படக்குழு தயாரிப்பு நிறுவனம். இதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஆஷா உத்தரவு பிறப்பித்தார். நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால், ஜனநாயகன் மறு தணிக்கை செய்யப்பட உள்ளது. இதனால் ஜனநாயகன் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ஜனநாயகன். ஹெச் வினோத் இயக்கத்தில், கேவிஎன் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் சென்சார் சான்றிதழ் பிரச்சினையால் படம் குறித்த தேதியில் வெளியாகவில்லை. இதனால் படக்குழு உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஆஷா, படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும் சென்சார் போர்டு பதிலளிக்க உரிய அவகாசம் வழங்கவில்லை எனக்கூறி வழக்கை மீண்டும் தனி நீதிபதியே விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். நீதிமன்ற வழக்குகளால் படத்திற்கு தணிக்கை சான்று கிடைப்பது தாமதம் ஆகிக்கொண்டே சென்றது. இந்த நிலையில் தான், படத்தை மறுஆய்வுக்கு அனுப்ப தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதால் இந்த வழக்கை திரும்ப பெற முடிவு செய்தது.இதுகுறித்து உயர் நீதிமன்றம் பதிவுத்துறையில், தயாரிப்பு நிறுவனம் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. அதில், வழக்கை திரும்ப பெறுவதாக கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பி.டி ஆஷா வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஜனநாயகன் படக்குழுவினர் வழக்கை வாபஸ் பெறுவதாக கூறியதை அடுத்து வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ஜனநாயகன் மறு தணிக்கை செய்யப்பட உள்ளது. எனவே ஜனநாயகன் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 20 நாட்களில் படத்தை பார்த்து சான்றிதழ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.படக்குழுவும் இந்த மாத இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.













