
புதுடெல்லி: மே 12-
மோசடி மன்னன் சுகேஷ் சந்திர சேகர் என்பவர், தன்னை ராகுல் காந்தியின் உதவியாளர் என கூறி நிதி மோசடிகளில் ஈடுபட்டார். டெல்லியில் உள்ள பெரும் புள்ளிகளை தெரியும் எனக் கூறி சிறையில் இருக்கும் தொழிலதிபர்கள் சிலருக்கு ஜாமீன் பெற்றுத்தர அவர்களது குடும்பத்தினரிடம் ரூ.200 கோடி வரை மோசடி செய்தார்.
மோசடி பணத்தில் தனது காதலி பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ்க்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். நிதி மோசடி வழக்கில் சிக்கிய சுகேஷ் தற்போது டெல்லி சிறையில் உள்ளார். இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் நடிகை ஜாக்குலின் அப்ரூவராக மாற விரும்புவதாக மனு செய்தார். இந்த மனு மீதான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் கூறப்பட்டதாவது: சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணியை முழுவதுமாக நடிகை ஜாக்குலின் அறிந்தே, அவர் அளித்த விலை உயர்ந்த பரிசு பொருட்களை தொடர்ந்து பெற்று வந்தார். இந்த வழக்கில் அவர் பாதிக்கப்பட்டவர் அல்ல. அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளன. மோசடி பணத்தில் நடிகை ஜாக்குலின் குடும்பத்தினர் பயன் அடைந்து உள்ளனர். அதனால் அவர் அப்ரூவராக மாற விரும்பும் கோரிக்கையை ஏற்கக் கூடாது. இவ்வாறு அமலாக்கத்துறை வாதங்களை எடுத்து வைத்தது.

















