
வாஷிங்டன், ஏப்ரல் 9- ஈரான் போர் முடிந்து பேச்சுவார்த்தை கட்டத்தில் இருக்கும் வேளையில், டிரம்ப் அடுத்த டார்கெட்-ஐ நோக்கி நகர்ந்துள்ளார். மீண்டும் கிரீன்லாந்து கைப்பற்றும் முயற்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். இதோடு கிரீன்லாந்துக்கு பாதுகாப்பாக இருக்கும் நேட்டோ படைகளையும், நேட்டோ நாடுகளையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில், நேட்டோ நாடுகளுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் உடனான போரில் உதவாத நேட்டோ நாடுகளில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெற்று, ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கு மாற்றும் திட்டத்தை அவர் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவு அமெரிக்கா – நேட்டோ உறவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், நேட்டோ எங்களுக்கு தேவைப்பட்டபோது அங்கு இல்லை. எதிர்காலத்திலும் இருக்காது. கிரீன்லாந்து நினைவில் கொள்ளுங்கள் – (NATO) இது பெரிய, மோசமாக நிர்வகிக்கப்படும் அமைப்பு என்று பதிவிட்டு உள்ளார் டிரம்ப். இந்தப் பதிவு நேட்டோ நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. மேலும் ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடத்தவும், மீடியேட்டராக விளங்கவும் ஒரு ஐரோப்பிய நாடும் முன்வரவில்லை, இதனால் அமெரிக்கா பாகிஸ்தானை நம்பி களத்தில் இறங்க வேண்டிய நிலை உருவானது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட அறிக்கையின்படி, ஈரான் போரில் அமெரிக்காவுக்கு உதவாத நேட்டோ படை மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளையும் தண்டிக்க டிரம்ப் ஒரு திட்டத்தை ஆய்வு செய்து வருகிறார். ஈரான் போரில் உதவாத நேட்டோ நாடுகளில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெற்று, ஆதரவு அளித்த நாடுகளுக்கு மாற்றும் திட்டத்தை ஆய்வு செய்து வருகிறார். இது நேட்டோவுக்கு எதிரான டிரம்ப் திட்டமிட்டு வரும் பல திட்டங்களில் முக்கியமான ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


















