
மும்பை, மார்ச் 5- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்துடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான நடப்பு சாம்பியனான இந்திய அணி லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி கண்ட நிலையில் சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டிருந்தது. இதைத் தொடர்ந்து ஜிம்பாப்வே, மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது. 2010, 2022-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணி லீக் சுற்றில் மேற்கு இந்தியத் தீவுகளிடம் தோல்வி அடைந்த நிலையில் மற்ற 3 ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்திருந்தது. தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் இலங்கை, பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளை வீழ்த்தி அரை இறுதி சுற்றில் கால்பதித்து இருந்தது. சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஏற்பட்ட மோசமான தோல்விக்குப் பிறகு, இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. டாப் ஆர்டர் பேட்டர்கள் மூவரும் இடதுகை வீரர்களாக இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், தொடக்க ஆட்டக்காரராக சஞ்சு சாம்சன் கொண்டுவரப்பட்டார். இதன் மூலம் டாப் ஆர்டரில் தொடர்ந்த வலதுகை இடதுகை காம்பினேஷன் பிரச்சினையும் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் இந்திய அணியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கால் இறுதி போட்டி போன்று அமைந்த மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் கடைசி வரை களத்தில் நின்று 97 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார். எந்த ஒரு கட்டத்திலும் அவசரகதியுடன் மட்டையை சுழற்றாமல் கடைசி வரை பொறுமையாக விளையாடி இந்திய அணி வெற்றிக்கோட்டை கடப்பதற்கு உறுதுணையாக இருந்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு உயர்மட்ட செயல் திறன் வெளிப்படக்கூடும். லீக் ஆட்டங்களில் அதிரடி காட்டிய இஷான் கிஷன் சூப்பர் 8 சுற்றில் ஏமாற்றம் அளித்தார்.
இதேபோன்று தடுமாறிவரும் அபிஷேக் சர்மா, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அரை சதம் அடித்திருந்தார். ஆனால் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் விரைவுகதியில் விளையாடி 10 ரன்களில் வெளியேறியிருந்தார். இவர்கள் இருவரும் மீண்டும் பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும். திலக் வர்மா, ஷிவம் துபே ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் மீண்டும் தாக்குதல் ஆட்டத்தை தொடுக்கும் பட்சத்தில் அணியின் பலம் அதிகரிக்கும். பந்துவீச்சை பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஓவருக்கு சராசரியாக தலா 10 ரன்களுக்கு மேல் தாரை வார்த்திருந்தனர். அக்சர் படேல் ஓவருக்கு சராசரியாக 8.80 ரன்களையும் ஜஸ்பிரீத் பும்ரா சராசரியாக 9 ரன்களையும் வழங்கியிருந்தனர். இதனால் பந்துவீச்சு திட்டங்களில் இந்திய அணி ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ளக்கூடும். அக்சர் படேல் அல்லது வருண் சக்ரவர்த்தி நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது




















