
சென்னை: மார்ச் 4-
“சென்னையில் டெல்லி டெல்லி என்று கூவுவதும், அடிக்கிற கொள்ளைக்கு ரெய்டு வந்தால் டெல்லிக்கு வெள்ளைக்குடை பிடிப்பதும் யார் என்று உங்களுக்கே நல்லா தெரியும். ஓம் சக்தி பராசக்தி, திமுக ஒரு தீயசக்தி என சின்னப் பசங்க எல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்” என தவெக தலைவர் விஜய் இன்று தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்று வரும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, இன்று மார்ச் 4 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் அவர் பிரச்சாரம் செய்கிறார். கரூர் அசம்பாவித சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய், தனது மக்கள் சந்திப்பை நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றி ஒவ்வொரு கூட்டத்திற்கு 5,000 நிர்வாகிகளுக்கு பாஸ் கொடுத்து, பங்கேற்க வைத்து மாவட்ட வாரியாக கூட்டங்களை நடத்தி வருகிறார். சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற திறந்தவெளி கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் வெயிலில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததை கருத்தில் கொண்டு, வேலூர் மாவட்டத்தில் பந்தல் அமைக்கப்பட்டு கூட்டம் நடத்தப்பட்டது. அடுத்த கட்டமாக தஞ்சை மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் இன்று நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இதற்காக தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிப்பட்டியில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சந்திப்பில் மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 4,900 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் முன்கூட்டியே அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. திடலுக்குள் நுழைவதற்கு க்யூஆர் கோடு ஸ்கேன் செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் அழைப்பிதழ் பெற்ற நிர்வாகிகள் மட்டுமே உள்ளே செல்ல முடியும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
பெருமளவில் மக்கள் திரள்வதை தவிர்த்து, நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் கூட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து காவல் துறை சார்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மேலும் இன்றைய கூட்டத்தில் விஜய் என்ன பேசப் போகிறார் என்ற ஆர்வத்தில் தொண்டர்கள் உள்ளனர். முன்னதாக தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பில், “மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, மார்ச் 4ஆம் தேதி புதன்கிழமை, தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், திருவையாறு உட்கோட்டம், செங்கிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அய்யாசாமிப்பட்டி பிரிவு சாலை எதிரில் பகல் 11 மணி முதல் 3 மணிக்குள் நடைபெற உள்ளது. காவல்துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4900 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்ட கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.















