
டெல்லி, மே 22- பக்ரீத் பண்டிகையையொட்டி தடை செய்யப்பட்ட விலங்குகளைப் பலியிட்டால் குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி அரசு எச்சரித்துள்ளது. வரவிருக்கும் (மே 28) பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தேசிய தலைநகரான டெல்லி முழுவதும் விலங்கு பலியிடுதல், கழிவு அகற்றுதல் மற்றும் விலங்கு விற்பனை ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் வகையிலான கடுமையான வழிகாட்டுதல்களை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட விலங்குகளை பலியிடுதல், சட்டவிரோத விலங்கு சந்தைகள் அல்லது பலியிட்ட பிறகு கழிவுகளை முறையற்ற வகையில் அகற்றுதல் உள்ளிட்டவை தொடர்பாக அறிவிக்கப்பட்டிருக்கும் விதிகளை மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி அமைச்சர் கபில் மிஸ்ரா எச்சரித்து உள்ளார். மேலும் பசுக்கள், கன்று குட்டிகள், ஒட்டகங்கள் மற்றும் பிற சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட்ட கால்நடைகளைப் பலியிடுவது முற்றிலும் சட்டவிரோதமானது. அதே போல தெருக்கள், சாலைகள், குடியிருப்புப் பகுதிகள் அல்லது பொது இடங்களில் விலங்குகளை பலியிட கூடாது. பலியிடப்பட்ட விலங்குகளின் ரத்தம், கழிவுகள் போன்றவற்றை திறந்தவெளி சாக்கடைகளிலோ, வடிகால்களிலோ அல்லது பொது இடங்களிலோ கொட்டக் கூடாது. அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே குர்பானி கொடுக்கப்பட வேண்டும் என்றும் டெல்லி அரசு அறிவுறுத்தி உள்ளது.


















