Home செய்திகள் தேசிய செய்திகள் டெல்லி சிபிஐ முன் நாளை விஜய் ஆஜர் – கரூர் துயரம் குறித்து வாக்குமூலம்

டெல்லி சிபிஐ முன் நாளை விஜய் ஆஜர் – கரூர் துயரம் குறித்து வாக்குமூலம்

புதுடெல்லி: மார்ச் 14-
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விஜய் ஏற்கனவே இரண்டு முறை சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். டெல்லியில் நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில், ஒருநாள் முன்னதாகவே இன்று மாலை தனி விமானத்தில் தவெக தலைவர் விஜய் டெல்லிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்றது. அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் டெல்லியில் உள்ள சிபி அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகினர்.
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி விஜய்க்கு 2 முறை சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த ஜனவரி 12, 19 ஆம் தேதி டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு விஜய் நேரில் ஆஜராகினார். அவரிடம் தொடர்ந்து பல மணி நேர விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ விசாரணைக்கு மார்ச் 10 ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. தவெக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் விஜய் நேர்காணல் நடத்தவிருந்த நிலையில், அவர் டெல்லி செல்வில்லை. ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பணிகள் இருப்பதால் விலக்கு அளிக்க வேண்டும் என்று விஜய் சார்பில் கோரிய நிலையில், மார்ச் 15 ஆம் தேதியான நாளை விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ புதிய சம்மன் அனுப்பியிருந்தது. சென்னையில் ஆஜராக அனுமதி கோரியதை சிபிஐ நிராகரித்தது.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்காக நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகிறார். இதற்காக ஒருநாள் முன்னதாகவே இன்று மாலை 3 மணியளவில் தனி விமானத்தில் டெல்லி புறப்படுகிறார்.