
வாஷிங்டன்: மார்ச் 7-
மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பாலியல் வழக்கில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தமக்கு உடல்ரீதியாக தொல்லை அளித்ததாகப் பெண் ஒருவர் தெரிவித்துள்ள புதிய புகார்கள் அடங்கிய எப்ஸ்டீன் கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வியாழக்கிழமை வெளியிட்டது.மறைந்த பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் மூலம் ட்ரம்ப் தமக்கு அறிமுகமானதாகவும், அதன் பிறகு அவர் தமக்கு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் அளித்ததாகவும் அந்தப் பெண் எப்பிஐ அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு அந்தப் பெண்ணிடம் எப்பிஐ நடத்திய பலகட்ட விசாரணைகளின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், தமக்கு 13- 15 வயது இருக்கும்போது எப்ஸ்டீன் மற்றும் ட்ரம்ப் ஆகிய இருவராலும் தாம் பாதிக்கப்பட்டதாக அந்தப் பெண் கூறியுள்ளார்.
எப்ஸ்டீன் தன்னை நியூஜெர்சிக்கு அழைத்துச் சென்று ட்ரம்ப்புக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும், அப்போது தமக்கு நேரிட்ட பாலியல் அத்துமீறலைத் தடுக்க முயன்றபோது தாம் அவரை கடித்ததாகவும் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் மிரட்டல் அழைப்புகள் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், ட்ரம்ப் இந்த குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனிடையே, ட்ரம்ப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எப்ஸ்டீன் விசாரணை விவரங்களை ட்ரம்ப் நிர்வாகம் மறைப்பதாக ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

















