Home மாவட்டங்கள் பெங்களூர் தமிழகத்தில் வேட்பாளர் தாக்கல் நிறைவு

தமிழகத்தில் வேட்பாளர் தாக்கல் நிறைவு

சென்னை: ஏப்ரல் 6 –
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை 3,430 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தருமபுரியில் சவுமியா அன்புமணி உள்ளிட்டோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். மனுக்கள் பரிசீலனை நாளை நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் ஏப்.9-ம் தேதி வெளியாகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியானது. இதையடுத்து, அன்றைய தினமே தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. தலா 2,106 தேர்தல் பறக்கும் படைகள், நிலைக் கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 5.69 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், அனைத்து தொகுதிகளிலும் கடந்த மார்ச் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் முதல் நாளிலேயே வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் உட்பட முதல் நாளில் மொத்தம் 867 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.மார்ச் 31 (மகாவீர் ஜெயந்தி), ஏப்.1 (வங்கி விடுமுறை), ஏப்.3 (புனித வெள்ளி), ஏப்.5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 நாட்கள் பொது விடுமுறை என்பதால் மனு தாக்கல் நடைபெறவில்லை. அந்த வகையில், இதுவரை 3 நாட்கள் மட்டுமே வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை 3,430 மனுக்கள் இதில் 2,731 ஆண்கள், 698 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 3,430 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 84 மனுக்கள், பர்கூர் தொகுதியில் 29 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக மானாமதுரை, நிலக்கோட்டையில் தலா 5 மனுக்களும், காட்டுமன்னார்கோவில், திருவாரூர், பேராவூரணி, கந்தர்வகோட்டை ஆகிய தொகுதிகளில் தலா 6 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இதுவரை 282 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக தியாகராய நகர்தொகுதியில் 28 மனுக்கள், குறைந்தபட்சமாக ஆயிரம் விளக்கு தொகுதியில் 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தேர்தல் அறிவிக்கையில் கூறியபடி அனைத்துதொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைகிறது.