
புதுடெல்லி: மார்ச் 26 –
மக்களவையில் திருநங்கைகள் தொடர்பான சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் தென் சென்னை தொகுதி எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது: இது சாதாரண சட்டத் திருத்தம் அல்ல. மனித உரிமை, மரியாதையுடன் வாழும் உரிமை மற்றும் ஒரு சமூகத்தின் இருப்பின் மீது எழுப்பப்படும் கேள்வி. ஒரு நபரின் அடையாளத்தை அரசு தீர்மானிக்க முடியாது.
இது குறித்து திருநங்கை சமூகத்தினரின் கருத்துகள் கேட்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தின் நல்சா தீர்ப்பின்படி, சுய அடையாளம் என்பது தனி நபர் சுதந்திரத்துக்கும் மரியாதைக்கும் அடிப்படை உரிமையானது. இந்த மசோதா அதை மறுக்கும் வகையில் உள்ளது. இந்த மசோதா திருநங்கைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அரசு கூறினாலும், உண்மையில் அடையாளத்தை தாழ்மைப்படுத்தி, அரசின் கண்காணிப்பை அதிகரிக்கும் முயற்சியாக உள்ளது.
ஒரு சாதாரண ஆண் அல்லது பெண் தங்கள் பாலினத்தை நிரூபிக்க மருத்துவச் சான்றிதழ் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. திருநங்கை நபர்களிடம் தங்களின் அடையாளத்தை மருத்துவ வாரியம் மூலம் நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனை தேவையில்லை. இந்த மசோதா திருநங்கை என்ற வரையறையை நீக்கியுள்ளது. இதில், திருநங்கை பெண்கள், திருநங்கை ஆண்கள் போன்ற பலரை தவிர்க்கும் அபாயம் உள்ளது. புட்டுசாமி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கிய அடிப்படை உரிமைக்கு எதிரானதாகவும் உள்ளது. இந்த மசோதா கட்டாயப்படுத்தல், கடத்தல் போன்ற குற்றங்களைத் தடுப்பதாகக் கூறினாலும், அது திருநங்கைகளுக்கு ஆதரவான அமைப்புகளை சந்தேகப்படும் வகையில் உள்ளது. எனவே, இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். குறைந்தபட்சம் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
















