Home செய்திகள் தேசிய செய்திகள் திருப்பதி பக்தர்களுக்கு புதிய விதிமுறை

திருப்பதி பக்தர்களுக்கு புதிய விதிமுறை

திருப்பதி: மார்ச் 11-
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்களுக்கும், இலவச தரிசனத்திற்கு டோக்கன் பெற்றவர்களுக்கும் வரும் 16ஆம் தேதி முதல் புதிய நடைமுறை வரும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை துவாரபாலகர்களை தாண்டி உள்ளே சென்று தரிசனம் செய்து வந்ததை யாராலும் மறக்க முடியாது. ஆனால் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க தற்போது உள்ளே அனுமதிக்காமல் அப்படியே துவார பாலகர்கள் இருக்கும் இடத்துடன் வெளியே அனுப்பி விடுகிறார்கள்.அந்த வகையில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தந்து ஏழுமலையானை தரிசிக்கிறார்கள். அப்போதெல்லாம் ரூ 50 தரிசன டிக்கெட் மேல் திருப்பதியிலேயே கிடைத்தது. ஆனால் தற்போது ரூ 300 தரிசன டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே அதுவும் 90 நாட்களுக்கு முன்புதான் புக் செய்ய முடியும். எனவே நினைத்த நேரத்தில் ஏழுமலையானை பார்க்க வேண்டும் என்றால் தர்ம தரிசனத்திலோ அல்லது நடைபாதை தரிசனத்திலோ செல்ல வேண்டும். இந்த நிலையில் தர்ம தரிசனத்தில் மணிக்கணக்கில் காத்திருப்பதை தடுக்கவே அதற்கு டோக்கன் வழங்கப்படுகிறது. அதில் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் உள்ளே செல்லலாம். பொதுவாக ரூ 300, டோக்கன் பெற்று செல்லும் தர்ம தரிசனத்தில் தேவஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் டைம் பார்த்து யாரையும் அனுமதிப்பதில்லை.
உதாரணமாக பகல் 3 மணிக்கு டிக்கெட் புக் செய்திருந்தால், 1 மணிக்கு சென்றாலும் அனுமதித்தனர், மாலை 5 மணிக்கு சென்றாலும் அனுமதித்தனர். இதனால் ஏற்கெனவே 1 மணிக்கு டிக்கெட் எடுத்தவர்கள், மாலை 5 மணிக்கு டிக்கெட் எடுத்தவர்களுடன் இப்படி நேரத்தை தவறவிடுவோரின் கூட்டமும் சேர ஏழுமலையானை தரிசிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், உடல் உபாதை உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு தேவஸ்தானம் இனி ரூ 300 தரிசனம், இலவச தரிசன டோக்கன் (எஸ்எஸ்டி) வைத்திருப்பவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே தரிசன வரிசையில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவோ அல்லது தாமதமாகவோ வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே இனி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை என்கிறார்கள். நேரத்தை கடைப்பிடித்து எந்த சிரமமும் இன்றி ஏழுமலையானை தரிசித்து வாருங்கள்.
ஜூன் மாதத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான ரூ 300 தரிசன டிக்கெட் இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியிடப்படும். அது போல் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்களுக்கு அன்று பிற்பகலே அறைக்கான முன்பதிவும் வெளியாகும்.