
சென்னை: ஏப்ரல் 25 –
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா மே 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கருட சேவை 3-ம் தேதியும், தேரோட்டம் 7-ம் தேதியும் நடைபெறுகின்றன.
108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குவது சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில். இத்தலத்தில் யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்க, உற்சவரான தெள்ளிய சிங்கர், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.
இங்கு ஆண்டுதோறும் பார்த்தசாரதி சுவாமிக்கு சித்திரை மாதத்திலும், நரசிம்மருக்கு ஆனி மாதத்திலும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பார்த்தசாரதி பெருமாள் சித்திரை பிரம்மோற்சவம் மே மாதம் நடைபெற உள்ளது.இதையொட்டி, ஏப்.30-ம் தேதி அங்குரார்ப்பணம் எனும் முளையிடுதல் விழா நடக்கிறது. மே 1-ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. அன்று இரவு 7.45 மணி அளவில் புன்னை வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறும்.
மே 2-ம் தேதி காலை 6.15 மணிக்கு சேஷ வாகனம், இரவு 7.45 மணிக்கு சிம்ம வாகனத்தில் உற்சவர் தெள்ளிய சிங்கர் எழுந்தருள்கிறார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை மே 3-ம் தேதி நடைபெறும்.
அன்று அதிகாலை 5 மணிக்கு கோபுர வாசல் தரிசனமும், இரவு அம்ச வாகனப் புறப்பாடும் நடக்கிறது. 4-ம் தேதி சூரியப் பிரபை வாகனம், 5-ம் தேதி காலை பல்லக்கில் நாச்சியார் திருக்கோலமும், இரவு அனுமந்த வாகனப் புறப்பாடும் நடைபெறுகிறது.
6-ம் தேதி அதிகாலை சூர்ணாபிஷேகம், அதைத் தொடர்ந்து, ஆனந்த வாகனம், இரவு யானை வாகனப் புறப்பாடு நடைபெறுகிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா 7-ம் தேதி நடைபெறுகிறது.
அதிகாலை 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் உற்சவர் தேரில் எழுந்தருள்கிறார். காலை 7 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்க, தேரோட்டம் தொடங்குகிறது. இரவு 9 மணிக்கு தோட்டத் திருமஞ்சனம் நடக்கிறது.





















