
டெல்லி, மார்ச் 7- கடந்த சனிக்கிழமை அன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் திடீரென ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனால் கடும் ஆத்திரமடைந்த ஈரான் ராணுவம் பதிலுக்கு இஸ்ரேல் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. துபாய், சவுதி , பஹ்ரைன் போன்ற நாடுகளில் இருக்கக்கூடிய அமெரிக்க படைத்தளங்கள் மற்றும் தூதரகங்கள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது ஈரான். மேற்காசியாவில் நிலவும் இந்த போர் பதற்றம் பங்குச் சந்தைகள் அனைத்தையும் பெரிய அளவில் வீழ்ச்சி அடைய வைத்துள்ளது. கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது பல்வேறு பொருட்களின் சரக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது. உலகின் புகழ்பெற்ற துபாய் தங்கச்சந்தையிலும் ஈரான் போர் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த போர் காரணமாக விமான போக்குவரத்து தடைப்பட்டு இருக்கிறது. இதனால் துபாயில் இருந்து மற்ற நாடுகளுக்கு தங்கத்தை கொண்டு செல்ல முடியாத சூழல் உண்டாகி இருக்கிறது. இந்தியா போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த தங்க வர்த்தகர்கள் துபாயில் இருந்து தான் தங்கத்தை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். ஆனால் போர் காரணமாக விமான போக்குவரத்து நின்று, சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் துபாயில் அதிகளவு தங்கம் தேக்கமடைந்துள்ளதாம், டீலர்கள் தற்போதைக்கு புதிய ஆர்டர்களை வழங்காமலும் ஏற்கனவே கொடுத்த ஆர்டர்களை எடுக்காமலும் இருக்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.















