துபாயில் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியதா?

துபாய்: மார்ச் 4-
அமெரிக்காவுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் நாட்டு ராணுவம் துபாய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் தொடர்ச்சியாக டிரோன்கள் மூலம் தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரான் நடத்திய இந்த திடீர் தாக்குதலால் துபாய் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய ஏராளமான மக்கள் அச்சமடைந்தனர்.
குறிப்பாக சர்வதேச விமான நிலையம் மற்றும் ஐந்து நட்சத்திர விடுதிகள் என பல்வேறு பகுதிகளிலும் ஈரான் தாக்குதல் நடத்தி மக்களை பெருமளவில் கலக்கமடைய வைத்தது. ஒவ்வொரு நொடியும் வெடிகுண்டு சத்தம் கேட்பதாகவும், உயிருக்கு அஞ்சி இருப்பதாகவும் ஏராளமானவர்கள் வேதனை தெரிவித்தனர். போர் காரணமாக ஏராளமான விமான சேவை நிறுவனங்கள் வளைகுடா நாடுகளுக்கான விமான சேவைகளையும் முற்றிலுமாக நிறுத்தி வைத்திருந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் நூற்றுக்கணக்கானவர்கள் விமான நிலையங்களிலேயே சிக்கி தவித்தனர்.
வேலை மார்க்கமாகவும் தொழில் மார்க்கமாகவும் துபாய் உள்ளிட்ட நகரங்களில் தங்கி இருக்கக்கூடிய இந்தியர்கள் தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர். ஈரான் தாக்குதல் காரணமாக இரண்டு நாட்களாக துபாய் பங்குச்சந்தையும் செயல்படவில்லை மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நான்கு நாட்கள் பதட்டமான சூழலுக்கு பிறகு துபாயில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்த பங்குச் சந்தைகள் இன்று மீண்டும் திறக்கப்பட இருக்கின்றன. துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களில் பல்வேறு அலுவலகங்களும் பழையபடி செயல்பட தொடங்கி இருக்கின்றன. ஈரான் தாக்குதல் காரணமாக ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்தப்பட்ட நிலையில் அவர்கள் படிப்படியாக அலுவலகம் வர தொடங்கியுள்ளனர்.
பங்குச்சந்தைகள் வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளது. முன்னதாக அரசு சார்பாக வெளியிட்ட அறிவிப்பில் விமான போக்குவரத்து படிப்படியாக மீண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான விமான நிறுவனங்கள் மூலம் தினமும் 27 ஆயிரம் பேர் பயணம் செய்யக்கூடிய வகையில் கூடுதலாக 80 விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 1 முதல் 60 விமானங்கள் இயக்கப்பட்டு இருப்பதாகவும் 17,498 பேர் இதில் பயணம் செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.