
துபாய்: மார்ச் 18-
அமெரிக்கா, இஸ்ரேல் போருக்கு பதிலடியாக ஈரான் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தை தான் குறிவைத்து அடித்து வருகிறது. குறிப்பாக துபாய் மற்றும் அபுதாபியை தான் குறிவைத்து தாக்குகிறது. சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஓமன் உள்ளிட்ட நாடுகளை விட துபாய் மீது தான் ஈரான் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வரும் நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கிறது. அமெரிக்காவின் ராணுவ தளம், விமானப்படை தளம், கடற்படை தளம் இருக்கும் நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது.
அந்த வகையில் சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட பல நாடுகள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் மீது தான் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
பிற நாடுகளை ஒப்பிடும்போது தினந்தோறும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபி நகரங்களை குறிவைத்து ஈரான் அடிக்கிறது. துபாய் விமான நிலையம், பிற உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளும் குறிவைக்கப்பட்டுள்ளது. புர்ஜ் அல் அரப்க்கு அருகே உள்ள முக்கிய கட்டங்கள் சேதமடைந்துள்ளன. துறைமுகங்களில் தீ விபத்துகளும் பதிவாகியுள்ளன. மொத்தம் 6 பேர் வரை பலியாகி உள்ளனர். ஒரு இந்தியர் காயமடைந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் இருநகரங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் சார்பில் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள்,
டிரோன்கள் இந்த நகரங்களை தாக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிற அரபு நாடுகளை விட ஐக்கிய அரபு அமீரகமே அதிக தாக்குதலை சந்தித்துள்ளது. மார்ச் 15ம் தேதி நிலவரப்படி அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘’ ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் 298 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 1,606 டிரோன்களை இடைமறித்து அழித்துள்ளது’’ என தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் உள்ள கத்தார், பஹ்ரைன், சவுதி அரேபியா அல்லது குவைத் போன்ற அண்டை நாடுகளின் மீதான ஈரானின் தாக்குதல்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் அதிகமாகும்.

















