
சென்னை: மார்ச் 30 –
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், கள்ளச்சந்தையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்களை பல ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஓட்டல்களில் தேநீர், சிற்றுண்டி, சாப்பாடு உள்ளிட்டவற்றின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
மத்தியக் கிழக்கில் போர்ப் பதற்றம் நீடிக்கிறது. இதனால் ஈரானின் கடல்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டு இந்தியாவில் எல்பிஜி காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகிக்கப்படும் நிலையில், வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் நிறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் காஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது.
வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் நிறுத்தப்பட்டதால், பெரும்பாலான இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சிலர் விறகு அடுப்பைப் பயன்படுத்துகின்றனர். காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள், தேநீர் கடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் தேநீர் மற்றும் சிற்றுண்டி விலை அதிகரித்துள்ளது.சில கடைகள் வணிக சிலிண்டர்கள் கிடைக்காமல் வீட்டு உபயோக சிலிண்டரை நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம், வடபழனி, அடையாறு, தி.நகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பல சாலையோர உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் வணிக சிலிண்டர்கள் கிடைக்கவில்லை என்று அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
நுங்கம்பாக்கம், சூளைமேட்டில் ஒரு கப் தேநீரின் விலை ரூ.12-ல் இருந்து ரூ.20 ஆக உயர்ந்துள்ளது. தாம்பரத்தில் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட தேநீர் தற்போது ரூ.25 ஆக விலை உயர்ந்துள்ளது. அடையாறில் சமோசா, பஜ்ஜி, போண்டா போன்ற சிற்றுண்டிகள் விலை ரூ.35-ல் இருந்து ரூ.40 ஆக உயர்ந்துள்ளது. கலவை சாதம் விலையும் உயர்ந்துள்ளது. உணவகங்களில் சாப்பாட்டுக் கட்டணத்துடன் காஸ் சிலிண்டர் கட்டணத்தைச் சேர்த்து வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கின்றனர்.
















