
சென்னை: மார்ச் 25-
தமிழர்களையும் இசையையும் பிரிக்க முடியாது. சுதந்திர போராட்டம் முதற்கொண்டு வீரத்தை ஊட்டவும், எழுச்சியை உருவாக்கவும் பாடல்கள் பாடப்பட்டன. அந்தவகையில், தேர்தல் காலத்தில் வாக்காளர்களை ஈர்க்கும் முக்கிய கருவியாக தேர்தல் பிரச்சார பாடல்கள் இருக்கின்றன.
இந்த பாடல்களை உருவாக்க பல்வேறு கட்சிகளும் தனியாக ஒரு குழுவையே உருவாக்கி, பெரும் செலவில் பாடல்களை வடிவமைக்கின்றனர். அதில், தங்கள் கட்சியின் கொள்கைகள், மக்கள் நல திட்டங்கள், தலைவர்கள் குறித்த கருத்தை, மக்கள் விரும்பும் எளிய இசையில் உருவாக்குகின்றனர். அதன்படி, திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்களுக்கென்று தனித்தனியாக பாடல்களை வெளியிட்டு, தேர்தல் நேரத்தில் பிரச்சாரங்கள், பொதுக் கூட்டங்கள், தங்கள் கட்சி யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
திமுக சார்பில் கடந்த தேர்தலின்போது, ‘ஸ்டாலின்தான் வராரு.. விடியல் தர போறாரு..’ என்ற பிரச்சார பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவி வரவேற்பை பெற்றது. இந்த முறை ‘ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற ராப் இசை கலந்த பாடலை திமுக வெளியிட்டுள்ளது.‘ஸ்டாலின் தான் வராரு…’ பாடல் அளவுக்கு இன்னும் இந்தப் பாடல் பிரபலமாகாத நிலையில், அந்த பாடலை சமூக வலைதளங்களில் ‘பெய்டு புரோமோஷனாக’ செய்யும் முயற்சியில் திமுக ஐ.டி விங் நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

















