Home செய்திகள் தேசிய செய்திகள் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு

தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு

புதுடெல்லி: ஏப்ரல் 17-
தொகுதி மறு​வரையறை தொடர்​பான 3 மசோ​தாக்​கள் மக்​களவை​யில் நேற்று தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்த மசோ​தாக்​கள் மீது இன்று வாக்​கெடுப்பு நடத்​தப்பட உள்​ளது.
கடந்த 2023-ம் ஆண்​டில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் நிறைவேற்​றப்​பட்​டது. இதன்​படி நாடாளு​மன்​றம், சட்​டப்​பேர​வை​களில் மகளிருக்கு 33 சதவீத இடங்​கள் ஒதுக்​கப்பட வேண்​டும். மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்த மக்​களவை​யில் தற்​போதுள்ள 543 இடங்​களை, 850 ஆக அதி​கரிக்க மத்​திய அரசு திட்​ட​மிட்டு உள்​ளது.
இதற்​காக நாடாளு​மன்​றத்​தின் சிறப்​புக் கூட்​டம் நேற்று தொடங்​கியது. முதல் நாளில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்​து​வதற்​காக அரசி​யல் சாசன திருத்​தம் (131-வது திருத்​தம்) மசோதா 2026, தொகுதி மறு​வரையறை மசோதா 2026 ஆகிய​வற்றை மத்​திய சட்ட அமைச்​சர் அர்​ஜுன் ராம் மேக்​வால் மக்​களவை​யில் அறி​முகம் செய்​தார். இதே​போல யூனியன் பிரதேச சட்​டங்​கள் (திருத்த ) மசோதா 2026-ஐ உள்துறை அமைச்​சர் அமித் ஷா மக்​களவை​யில் அறி​முகம் செய்​தார்.
இந்த 3 மசோ​தாக்​களுக்​கும் காங்​கிரஸ், சமாஜ்​வா​தி, திமுக உள்​ளிட்ட இண்டியா கூட்டணி கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தன. இவை தொடர்​பாக ஆளும் கூட்​ட​ணி, எதிர்க்​கட்​சிகள் இடையே சுமார் 40 நிமிடங்​கள் கடும் வாக்​கு​வாதம் நடை​பெற்​றது. இதைத் தொடர்ந்து மசோ​தாக்​களை விவாதத்துக்கு ஏற்​ப​தா, வேண்​டாமா என்​பது குறித்து வாக்​கெடுப்பு நடந்தது. மசோ​தாக்​களுக்கு ஆதர​வாக 251 பேரும், எதி​ராக 185 பேரும் வாக்​களித்​தனர். பெரும்​பான்மை வாக்​கு​களின் அடிப்​படை​யில் 3 மசோ​தாக்களும் மக்​களவையில் அதி​காரப்பூர்வ​மாக தாக்​கல் செய்​யப்​பட்​டன.
இதைத் தொடர்ந்து 3 மசோ​தாக்​கள் மீதான விவாதம் தொடங்​கியது. மத்​திய சட்ட அமைச்​சர் அர்​ஜுன் ராம் மேக்​வால் விவாதத்தை தொடங்​கி​வைத்​தார். அவர் கூறிய​தாவது: மகளிருக்​கான இடஒதுக்​கீட்டை சட்ட மேதை அம்​பேத்​கர், முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல் கலாம் உள்​ளிட்​டோர் வலி​யுறுத்​தினர். தற்​போது நாடாளு​மன்​றம், சட்​டப்​பேர​வை​யில் பெண்​களுக்கு 33 சதவீத இடஒதுக்​கீட்டை வழங்க ஏது​வாக புதிய மசோ​தாக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்டு உள்​ளன. இதன்மூலம் அனைத்து மாநிலங்​களி​லும் 50 சதவீத எம்.பி. இடங்​கள் அதி​கரிக்​கப்​படும். 2029 மக்​கள​வைத் தேர்​தலின்​போது பெண்​களுக்கு 33 சதவீத இடஒதுக்​கீடு அமலாகும். இவ்​வாறு அவர் பேசினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: தமிழகத்தில் தற்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை 59 ஆக உயரும். அதே போல, கேரளாவில் 20-ல் இருந்து 30 ஆகவும், ஆந்திராவில் 25-ல் இருந்து 38 ஆகவும், தெலங்கானாவில் 17-ல் இருந்து 26 ஆகவும், கர்நாடகாவில் 28-ல் இருந்து 42 ஆகவும் அதிகரிக்கும். கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா போன்றே தற்போதைய மசோதாவும் உள்ளது. எந்த மாற்றமும் செய்யவில்லை. ஒரு புள்ளிகூட கூடுதலாக சேர்க்கப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.