
டெல்லி: மார்ச் 4-
இந்தியாவின் கடல்சார் மற்றும் வான் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த ரூ.5,083 கோடி மதிப்பிலான 2 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலோர காவல்படைக்கு 6 நவீன இலகுரக ஹெலிகாப்டர்களும் (ஏஎல்எச்) கடற்படைக்கு தரையில் இருந்து வான் இலக்குகளை செங்குத்தாக சென்று தாக்கும் ஷ்தில் ஏவுகணைகளும் கொள்முதல் செய்ய ரூ.5,083 கோடி மதிப்பிலான 2 ஒப்பந்தங்களில் பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டது.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடனான ஏஎல்எச் ஒப்பந்தம் ரூ.2,901 கோடி மதிப்பிலானது. இந்த ஒப்பந்தம் செயல்பாட்டு உபகரணங்கள், பொறியியல் ஆதரவு மற்றும் செயல் திறன் அடிப்படையிலான தளவாட ஆதரவை உள்ளடக்கியது. இதுபோல் ஷ்தில் ஏவுகணைகளுக்கான ஒப்பந்தம் ரஷ்யாவின் ரோசோபோரோனெக் ஸ்போர்ட் நிறுவனத்துடன் கையெழுத்தானது. இது, ரூ.2,182 கோடி மதிப்பிலானது.
கடலோர காவல் படையில் புதிய இலகுரக ஹெலிகாப்டர்கள் சேர்ப்பது அதன் திறனை கணிசமாக அதிகரிக்கும். இந்த இரட்டை இன்ஜின் ஹெலிகாப்டர்கள் தற்போது இயக்கப்படும் ஹெலிகாப்டர்களை விட மேம்பட்ட அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கும். மேலும் கரையோர விமான தளங்கள் மற்றும் கடலில் போர்க் கப்பல்களில் இருந்து பரந்த அளவில் கடல்சார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் திறனை கொண்டிருக்கும்.
இந்தியா – ரஷ்யா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை இது மேலும் வலுப்படுத்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.















