
புதுடெல்லி: மார்ச் 21 –
சமையல் காஸ் தட்டுப்பாடு நீடிப்பதால் நாடு முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்பதிவு செய்து பல நாட்கள் கடந்தும் சப்ளை இல்லாததால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ஈரான் போரால் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வர்த்தக காஸ் சப்ளை ரத்து செய்யப்பட்டது. இதனால் ஓட்டல்கள், தொழில்நிறுவனங்கள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன. வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் சப்ளையும் தற்போது முடங்கி உள்ளது. முன்பதிவு செய்து பல நாட்கள் கடந்தும் சிலிண்டர் சப்ளை இல்லாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 3வது வாரமாக இந்த பாதிப்பு நீடித்து வருகிறது. இந்தியாவின் 60 சதவீத காஸ், கச்சா எண்ணெய் இறக்குமதிகளைப் பெறும் முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பயந்து போன மக்கள் பீதி அடைந்து சமையல் காஸ் முன்பதிவு செய்தனர். கடந்த மார்ச் 13 அன்று முன்பதிவு 87.7 லட்சமாக உச்சத்தை எட்டியது, ஆனால் அதன்பிறகு மெதுவாக குறைந்தது. மார்ச் 19 அன்று சுமார் 55 லட்சம் முன்பதிவுகள் செய்யப்பட்டன. போருக்கு முந்தைய காலத்தில் ஒரு நாளுக்கான சராசரி முன்பதிவு 50-55 லட்சமாக இருந்தது. அந்த நிலையை தற்போது எட்டியுள்ளது. இருப்பினும் எல்பிஜி விநியோக நிலைமை கவலையளிப்பதாகவே உள்ளது. ஆனால் எந்தவொரு எல்பிஜி விநியோகஸ்தரிடமும் தட்டுப்பாடு இல்லை. கடந்த வாரத்தில், 11,300 டன் வர்த்தக எல்பிஜி வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த இரண்டு வாரங்களில் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி 40 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. 3 பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களும் போருக்கு முந்தைய கால அளவிலான தினசரி எல்பிஜி விநியோகங்களைச் செய்து வருகின்றன. இதனால் எல்பிஜி சிலிண்டர் விநியோகம் வழக்கம் போல் தொடர்கிறது. கள்ளச்சந்தை மற்றும் பதுக்கலைக் கட்டுப்படுத்த, சோதனைகளும் திடீர் ஆய்வுகளும் தொடர்கின்றன. நேற்று மட்டும் 4,500 சோதனைகள் நடத்தப்பட்டன, அதே நேரத்தில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் நிலையங்கள் மற்றும் எல்பிஜி விநியோகஸ்தர்களிடம் 1,800 திடீர் ஆய்வுகளை மேற்கொண்டன. கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்தை அமைக்குமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
இருப்பினும் நிலைமை இன்னும் கவலையளிப்பதாக உள்ளது. எனவே முன்பதிவு செய்த பிறகு, தங்களின் சிலிண்டர் வருகைக்காக பொதுமக்கள் உரிய காலம் வரும் வரை காத்திருக்க ஒன்றிய அரசு வலியுறுத்தி உள்ளது. மேலும் சமையல் எரிவாயுவான எல்பிஜி மீதான அழுத்தத்தைக் குறைக்க மக்கள் மாற்று எரிபொருட்களையும் ஆராய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் குழாய்வழி இயற்கை எரிவாயுவிற்கு மாற வேண்டும். இதுவரை புதியதாக 13,700 குழாய் இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 7,000 நுகர்வோர் எல்பிஜியிலிருந்து குழாய்வழி இயற்கை எரிவாயுவிற்கு மாறியுள்ளனர் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
















