Home செய்திகள் தேசிய செய்திகள் நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எவ்வளவு நாட்கள் நீடிக்க வாய்ப்பு?

நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எவ்வளவு நாட்கள் நீடிக்க வாய்ப்பு?

புதுடெல்லி: மார்ச் 11-
ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேல் போரினால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது எல்பிஜி காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் போரின் தாக்கம் இப்போது வீடுகளின் சமையலறை வரை எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
வர்த்தக காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உணவகங்கள் மூடப்படும் நிலை உருவாகி உள்ளது.இந்நிலையில், வீட்டுத் தேவைக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்துக்கு முன்னுரிமை அளித்து, அதற்கான உற்பத்தி பணி அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், காஸ் தட்டுப்பாடு எத்தனை காலம் நீடிக்கும் என்பது குறித்தும் இந்திய அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்தியாவின் தற்போதைய எரிவாயு சிலிண்டர் விநியோக நெருக்கடி என்பது குறுகிய கால அளவில் இருக்கும். ஏனெனில், அண்மையில் அறிவிக்கப்பட்ட விலை உயர்வு காரணமாக நார்வே, அமெரிக்கா போன்ற தொலைதூர பகுதிகளில் இருந்து எரிபொருள் ஆதாரத்தை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை பொருளாதார ரீதியாக சாத்தியமாகி உள்ளது’ என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், தொலைதூரத்திலிருந்து வரும் இந்த ஆதாரங்களை பெறுவதற்கு சற்று நேரம் எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் காரணமாக இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு நிரப்பப்பட்ட சரக்கு கப்பல்கள் நார்வே அல்லது அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தடைய சுமார் இரண்டு மாத காலம் ஆகும் என அந்தக் கப்பல் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதோடு, எரிவாயுவை ஆர்டர் செய்வது மற்றும் அதை டெலிவரி பெறும் நடைமுறையும் அடங்கியுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளனர்.

இருப்பினும், தேசம் எதிர்கொள்ளும் எரிவாயு விநியோக நெருக்கடி நெடுங்காலம் நீடிக்காது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதே நேரத்தில், இந்த குறுகிய காலத் தட்டுப்பாடு வலி தருவதாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
வீடுகளுக்கு முன்னுரிமை: தேசம் முழுவதும் உள்ள வீடுகளுக்கு இடையூறு ஏதும் இல்லாமல் எல்பிஜி காஸ் சிலிண்டர் விநியோக பணியை மேற்கொள்ள அரசு இந்நேரத்தில் முக்கியத்துவம் அளிக்கிறது. அதேநேரத்தில் வர்த்தக சிலிண்டர் விநியோக பணியை கவனிக்க எண்ணெய் நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் பிரிவின் செயல் இயக்குநர்கள் மூவர் அடங்கிய குழு ஒன்று திங்கள்கிழமை அமைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.இந்தியாவில், எல்பிஜியைப் பொறுத்த வரையில் சுமார் 80 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் எல்பிஜி தேவையில் 40 சதவீதத்தைக் கத்தார் பூர்த்தி செய்கிறது. ஈரான் தாக்குதல் காரணமாக கத்தாரின் முன்னணி நிறுவனங்கள் எல்பிஜி உற்பத்தி ஆலைகளை மூடிவிட்டன.