
சிவமொக்கா: ஏப்ரல் 10-
கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டம் ஹுலிகல் காட் (பாலே பரே) பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த மூன்று தொழிலாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஹாவேரி மாவட்டம், சக்கரு கிராமத்தைச் சேர்ந்த பணி மேற்பார்வையாளர் ரகு (37) மற்றும் நெலகலு கிராமத்தைச் சேர்ந்த ராஜு (30) உட்பட மூன்று பேர், மாலையில் காட் பகுதியின் கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் கான்கிரீட் சுவர் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தனர்.
விபத்தைத் தொடர்ந்து நேற்று நடத்தப்பட்ட மீட்புப் பணியின்போது இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இருள் சூழ்ந்ததால் மீட்புப் பணி நிறுத்தப்பட்ட நிலையில், இன்று காலை நடத்தப்பட்ட மீட்புப் பணியின்போது தொழிலாளி ஷபீர் (40) என்பவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
மீட்கப்பட்ட மூன்று உடல்களும் நகர மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளன. விபத்தில் காயமடைந்த மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்தில் மாநில பேரிடர் மீட்புப் படை தீயணைப்புப் படை மற்றும் காவல்துறையினரால் நடத்தப்பட்ட மீட்புப் பணி நிறைவடைந்தது.


















