Home செய்திகள் தேசிய செய்திகள் நீட் தேர்வு கட்டணத்தை திரும்ப பெற இன்றே கடைசி நாள்

நீட் தேர்வு கட்டணத்தை திரும்ப பெற இன்றே கடைசி நாள்

டெல்லி, ஜூலை 7- நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற இன்றே கடைசி வாய்ப்பு என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இன்று இரவு 11.50 மணிக்குள் விண்ணப்பதாரர்கள் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை சமர்பிக்க வேண்டும் என என்டிஏ தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி நடத்தப்பட்ட மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக வடமாநிலத்தை சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி நடந்த தேர்வு கடந்த இரு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு மிகவும் எளிதாக இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் அந்த மாணவர்களின் மருத்துவக் கனவு சுக்குநூறாக உடைந்துவிட்டது. இந்த நிலையில் நீட் மறுத்தேர்வு ஜூன் 21 ஆம் தேதி நடந்தது. இதனிடையே நீட் தேர்வுக்கு ஏற்கெனவே செலுத்திய கட்டணம் மாணவர்களுக்கு திரும்ப வழங்கப்படும் என்றும் விண்ணப்பதாரர்கள் ஜூலை 7ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. அந்த வகையில் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்குத் தேர்வு கட்டணத்தை திரும்ப பெறும் நடைமுறைகளை தேசிய தேர்வு முகமை தொடங்கியுள்ளது. ஏற்கனவே தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை சரியாக உறுதி செய்து சமர்ப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டணத் தொகை திரும்ப வழங்கும் பணிகள் நேரடியாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுவரை Refund கேட்டு 8,29,510 விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களது வங்கிக் கணக்கு விவரங்களைச் சரி செய்து அனுப்பியுள்ளனர். மீதமுள்ளவர்கள் உடனடியாக தங்களின் விவரங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான கட்டணத்தை திரும்ப பெற விண்ணப்பிக்காதவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் இன்று (ஜூலை 7) 11.50 மணிக்குள் தங்களின் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை சமர்பிக்குமாறு என்டிஏ அறிவுறுத்தியுள்ளது.