
மும்பை, மார்ச் 30- பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்றைய தினம் மிக மோசமான ஒரு நாளாக அமைந்திருக்கிறது. இந்திய பங்குச்சந்தைகள் இன்று பெரிய அளவிலான வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு பெஞ்ச்மார்க் குறியீடுகளுமே இன்று அதிகப்படியான விற்பனை அழுத்தத்தை சந்தித்தன. இதன் காரணமாக காலை 10:32 மணி அளவில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்து 72,581 புள்ளிகளாகவும் தேசிய பங்கு சந்தை குறியீட்டு 290 புள்ளிகள் சரிவடைந்து 22,528 புள்ளிகளாகவும் இருந்தது. 2800க்கும் அதிகமான பங்குகள் இன்றைய தினம் சிவப்பு நிறத்திலேயே காட்சி தந்தன. மார்ச் மாதத்தில் மட்டும் நிஃப்டி 50 மற்றும் சென்செக்ஸ் ஆகியவற்றின் மதிப்பு 10.5% குறைந்து இருக்கிறது.
கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு இந்திய பங்குச் சந்தை ஒரே மாதத்தில் இந்த அளவுக்கு வீழ்ச்சி அடைவது இதுவே முதல் முறையாகும். நாளைய தினம் பங்குச்சந்தைக்கு விடுமுறை. எனவே இந்த நிதி ஆண்டின் கடைசி வர்த்தக நாள் இதுவாகும். கடந்த வாரம் எல்லாம் சரிவிலேயே காணப்பட்ட பங்குச்சந்தைகள் இந்த வாரமாவது மீண்டு வரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , நிலைமை இன்னும் இன்னும் மோசமடைந்து தான் வருகிறது. ஈரான் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருவதால் உலக சந்தையில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கச்சா எண்ணையின் விலை உயர்ந்திருக்கிறது. பிரெண்ட் கச்சா எண்ண்எய் ஒரு பேரல் 116 டாலர்கள் என விற்பனை செய்யப்படுகிறது.
அதாவது ஒரு மாதத்திலேயே இதன் விலை 60% உயர்ந்திருக்கிறது., இதன் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்று வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்து வருவது, கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவை காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையிலிருந்து தொடர்ச்சியாக தங்களுடைய பங்குகளை விற்பனை செய்து வெளியேறிய வண்ணம் இருக்கின்றனர். இதன் காரணமாக இந்திய பங்கு சந்தை தொடர்ந்து சரிவிலேயே இருந்து வருகிறது. ஈரான் போர் ஒரு முடிவுக்கு வந்தால் மட்டுமே பங்குச்சந்தை மீண்டு வரும். இந்திய பங்குச்சந்தை சரிவால் இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்கள் 7 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.

















