
ஹைதராபாத்: மே 6-
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. முதல் 7 ஆட்டங்களில் தோல்விகளை சந்திக்காமல் வலம் வந்த பஞ்சாப் அணி கடைசியாக விளையாடிய 2 ஆட்டங்களிலும் சறுக்கலைச் சந்தித்தது.
பஞ்சாப் அணியின் சரிவுக்கு முக்கிய காரணம் அவர்கள் தங்களின் சீரான ஆட்டத்திறனை இழந்ததே ஆகும். இந்த சீசனில் பேட்டிங்கில் அவர்கள் வெளிப்படுத்திய அதிரடி, அந்த அணியின் பந்துவீச்சில் இருந்த குளறுபடிகளை மறைத்துவிட்டது. ஆனால் தற்போது
அந்த பலவீனங்கள் வெளியே தெரியத் தொடங்கியுள்ளன. அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் வேகத்தைத் தீர்மானித்த முன்வரிசை பேட்ஸ்மேன்கள் கடைசியாக குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறினர்.பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், கூப்பர் கானொலி ஆகியோர் குறைந்த ரன்களில் நடையை கட்டினர். ஸ்ரேயஸ் ஐயர், நேஹல் வதேரா ஆகியோரும் கைகொடுக்கத் தவறியிருந்தனர். சூர்யான்ஷ் ஷெட்கே (57), மார்கஸ் ஸ்டோனிஸ் (40) ஆகியோர் பொறுப்புடன் விளையாடியதால் பஞ்சாப் அணியால் கவுரமான ஸ்கோரை எடுக்க முடிந்திருந்தது.
லீக் சுற்று இறுதிக்கட்டத்தை நெருங்குவதால், பஞ்சாப் அணி துல்லியமான ஆட்டத்தையும் தெளிவான திட்டங்களையும் செயல்படுத்த வேண்டியது அவசியம்.இன்றைய போட்டி நடைபெறும் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. இதனால் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் வலுவான அடித்தளம் அமைத்து கொடுப்பதில் கவனம் செலுத்தக்கூடும். பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகளை பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் ஹைதராபாத் அணி முதலிடத்துக்கு முன்னேறும்.





















